Breaking News

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி சேவைக்காட்சி

காஞ்சிபுரம், ஜன.2 :

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திங்கள்கிழமை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர் புஷ்ப அங்கியிலும், உற்சவர் ரத்ன அங்கி சேவையிலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும்,அத்திவரதர் புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூலவர் தேவராஜசுவாமி புஷ்ப அங்கி சேவையிலும்,உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கி சேவையிலும் அதிகாலையிலிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.நண்பகலில் உற்சவர் ஸ்ரீதேவி,பூதேவியருடன் ரத்ன அங்கி அணிந்து திருமலையிலிருந்து இறங்கி வந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளினார்.பின்னர் உற்சவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும்,தீபாராதனைகளும் நடந்தன.

மாலையில் ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் திருக்கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்தார்.வாண வேடிக்கைகளும் நடைபெற்றன. ஆழ்வார்கள், ஆசாரியார்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.விழாவில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரா.வான்மதி,கோயில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் ஆகியோர் உட்பட வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

No comments

Thank you for your comments