சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா ... ஆட்சியர் ஆர்த்தி பங்கேற்பு
காஞ்சிபுரம் மாவட்டம், திம்ம சமுத்திரம் ஊராட்சி, சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தைப்பொங்கல் தினத்தைமுன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் சமத்துவ பொங்கல் அப்பகுதி மக்களுடன் கொண்டாட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டதை தொடர்ந்து, இன்று (13.01.2023) காஞ்சிபுரம் மாவட்டம், திம்ம சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு கிராம சமத்துவபுரத்தில், சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் போடப்பட்ட கோலங்களை பார்வையிட்டு, கிராமத்து பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்கள். மேலும் அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளான தெருக்கூத்து, பள்ளி மாணவ/ மாணவியர்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் ஓவியப்போட்டி, உறியடித்தல், கயிறு இழுத்தல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.
போட்டியில் வெற்றி பெற்ற மகளீர் சுய உதவிக்குழுவினருக்கும், மாணவ/மாணவியர்களுக்கும், தெருக்கூத்து கலைஞர்களுக்கும் பரிசுகள் வழங்கி, பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 274 ஊராட்சிகள், அனைத்து ஊராட்சியிலும் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டு வருகிறது. இவ்விழாவினை முன்னிட்டு, ஊராட்சிக்குட்பட்ட தெருக்கள், கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யப்படவேண்டும், மேலும் சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நீர் தொட்டி இயக்குபவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தவேண்டும். ஊராட்சியில் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் வேற்றுமைகளை மறந்து அன்பையும், சமூக நல்லிணக்கத்தையும் வளர்க்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொண்டார்கள்..
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியகுழு துணைத்தலைவர் திருமதி.திவ்யபிரியா இளமது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கோபி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments