Breaking News

காஞ்சிபுரத்தில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த பள்ளி மாணவர்கள்!

காஞ்சிபுரம், ஜன.29-

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 48 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு படித்த பள்ளி மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை இணைந்து கலந்துரையாடி தங்களது பள்ளி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1974 மற்றும் 1975 ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சி அப்பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் ஜி.குப்புச்சாமி தலைமையில் நடைபெற்றது. 

பழைய மாணவர்களான தொழிலதிபர் ஏ.ஜி.பொய்யாமொழி, குடிநீர் வடிகால் வாரியத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற டி.பி.வெங்கடேசன், அப்போதைய கணித ஆசிரியர் கே.கங்காதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் ஜி.புகழேந்தி வரவேற்று பேசினார்.

பள்ளியில் 1974 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தாங்கள் படித்த போது கிடைத்த அனுபவங்களையும், தற்போது செய்து வரும் பணிகளையும்,குடும்ப விபரங்களையும் ஒவ்வொருவராக பேசினார்கள். 

பழைய மாணவரும், தோல் நோய் சிறப்பு சிகிச்சை மருத்துவருமான பரமானந்தம், உடற்கல்வி ஆசிரியர் டி.இளங்கோவன், தொலை தொடர்புத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலரான சி.எஸ்.உமையொருபாகன் ஆகியோர் உட்பட 62 மாணவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கு தேவையான உபகரணங்களை விரைவில் வாங்கி கொடுப்பது,தற்போது பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டுவது எனவும் முடிவு செய்தனர்.


No comments

Thank you for your comments