Breaking News

விருதுநகர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து... உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி... முதல்வர் அறிவிப்பு

விருதுநகர்: 

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயமடைந்தனர். இவர்களில் 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைபெற்று வருகின்றனர்.



வெம்பக்கோட்டை அருகே உள்ள கனஞ்சாம்பட்டியில் சிவகாசியைச் சேர்ந்த மாயக்கண்ணன் என்பவருக்குச் சொந்தமான பேபி என்ற பெயரில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையை விஸ்வநத்தத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனுமதி பெற்று இயங்கி வரும் இந்த ஆலையில் 70-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆலையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இன்றும் இந்த பட்டாசு ஆலையில வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரித்தபோது உராய்வு ஏற்பட்டு திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது.

அப்போது, அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த வெடிவிபத்து ஏற்பட்ட அறை அருகே பட்டாசு தயாரித்துக்கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (26), மாரிமுத்து (34), ராஜ்குமார் (38), மகேஸ்வரன் (42), மாரியப்பன் (42), தங்கராஜ் (49), ஜெயராஜ் (72) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகலறிந்த வெம்பக்கோட்டை போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இரு வாகனங்களில் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, இடிபாடுகளில் சிக்கி உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்றும் கண்டுபிடித்து மீட்கப்பட்டது. அவர் யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. மேலும், காயமடைந்த கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தா நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும், மாரியப்பன், தங்கராஜ், ஜெயராஜ் ஆகியோர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

"திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மாடிக்கட்டடம் இடிந்து விழுந்து ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.


இவ்விபத்தில் பெற்றோரை இழந்துவாடும் குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் கூறியுள்ளார்.

இது போன்று விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் திருத்தங்கல்லைச் சேர்ந்த ரவி, (60) த/பெ. குருசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ், (வயது 48) த/பெ.ஆசீர்வாதம் என்பவருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று இலட்ச ரூபாயும் காயமடைந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments