ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு... பிப்ரவரி 27ல் தேர்தல்-மார்ச் 2ல் வாக்கு எண்ணிக்கை
புதுடெல்லி, ஜன.18-
வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மற்றும் தமிழகத்தின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்தார்.
நாகலாந்து, மேகாலயா, திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 3 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டது. அதன்படி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது.
இந்நிலையில், திரிபுரா மாநில சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப்ரவரி மாதம் 27ம் தேதி நாகாலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல் நடைபெறுவதாகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திரிபுரா மாநில சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 21ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஜனவரி 31ம் தேதியும், வேட்பு மனு வாபஸ் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27 ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், மார்ச் 2-ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடர் கழக நிறுவனர் பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்துள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா(46).
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார் திருமகன் ஈவெரா. அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியின் சார்பில் தமாகா இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா போட்டியிட்டார். இந்த தேர்தலில், 8904 வாக்குகள் வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோட்டில் காங்கிரஸ் வெற்றிபெற்று, பெரியாரின் கொள்ளுப்பேரன் திருமகன் ஈவெரா சட்டசபைக்குச் சென்றார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி 4-ஆம் தேதி அவர்மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான தொகுதியில் 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.
இந்நிலையில் மூன்று மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அத்துடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதியில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தேர்தல் அதிகாரியாக மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி இருப்பார் என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவை இடைத் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே இத்தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் மீண்டும் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Election Commission
- Schedule for Bye-election to 1(one) Parliamentary Constituency of UT of Lakshadweep and 6 (Six) Legislative Assemblies of Arunachal Pradesh, Jharkhand, Tamil Nadu, West Bengal and Maharashtra– reg.
- General Election to Legislative Assemblies of Meghalaya, Nagaland and Tripura, 2023
No comments
Thank you for your comments