மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.25.01 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பயனாளிகளுக்கு ரூ.25.01 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி வழங்கினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.01.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 210 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், கட்டியாம்பந்தல், ஆதவப்பாக்கம், காரணை, சேர்ப்பாக்கம் மற்றும் மருதம் கிராமத்தை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு ரூ.11,61,000/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், காஞ்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட மேல்ஓட்டிவாக்கம், கூரம் கிராமத்தை சேர்ந்த 20 பயனாளிகளுக்கு ரூ 13,40,000/- மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வருவாய் துறையில் பணியின்போது மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள்
3 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் மாநில அளவில் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது பெற்ற திரு.ஆர்.இளங்கோவன் மற்றும் திரு.எஸ்.கே.அந்தோனி பால் ஆகிய இருவருக்கும் ரூ.25,000/-க்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) திருமதி.கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.புண்ணியகோட்டி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் திரு பிரகாஷ்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments