போகிப்பண்டிகைக்காக 16 இடங்களில் குப்பைகள் சேகரிப்பு மையம் திறப்பு... காஞ்சிபுரம் ஆணையர்
காஞ்சிபுரம்,ஜன.9
போகிப்பண்டிகையை புகையில்லா பண்டிகையை கொண்டாடுவதற்காக காஞ்சிபுரம் மாநகராட்சி எல்லைக்குள் 16 இடங்களில் குப்பைகள் சேகரிப்பு மையம் செயல்பட இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது, காஞ்சிபுரம் மாநகர் கோயில் நகரமாகவும்,பட்டு நகரமாகவும் இருந்து வருவதால் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தினசரி ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் மாநகரில் சேரும் குப்பைகள்,கழிவுகளை தரம் பிரித்து பெற்று குப்பைகள் மாநகரில் சேரா வண்ணம் தொடர்ந்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். முக்கியமாக மக்கும் குப்பைகளை உரமாகவும்,மக்கா குப்பைகளை மறுசுழற்சிக்கும் பயன்படுத்திக் கொள்கிறோம். இந்நிலையில் போகிப்பண்டிகையை புகையில்லா பண்டிகையாக பொதுமக்கள் கொண்டாட வேண்டும் என்பதே எங்கள் இலக்காகும்.
போகிப்பண்டிகையின் போது தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழலை பாதிக்கும். தீ வைத்து குப்பைகளை எரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே குப்பைகளை தீ வைத்து எரிக்காமல் இருக்கவும்,குப்பைகளை சேகரிக்கவும் மாநகரில் 16 இடங்களில் குப்பைகள் சேகரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகரில் பூக்கடைச் சத்திரம், பஞ்சுப் பேட்டை,ஏகாம்பரநாதர் சந்நிதி தெரு,பிஎஸ்கே தெரு,ரயில்வே சாலை,3 ஆம் திருவிழா மண்டபம், விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு, அண்ணா தெரு,காவலான் தெரு, ஓரிக்கை சந்திப்பு,சதாவரம், ஆவாக்குட்டை, திருவேங்கடம் தெரு, இரட்டை கால்வாய், நியோ நகர் உட்பட 16 இடங்களில் குப்பைகள் சேகரிப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குப்பைகளை எரிக்காமல் அவரவர்க்கு அருகில் உள்ள இடங்களில் கொடுத்து புகையில்லா போகியை கொண்டாடி மகிழ்வோம் என்றும் ஆணையாளர் ஜி.கண்ணன் தெரிவித்தார்.
பேட்டியின் போது சுகாதார ஆய்வாளர்கள் இக்பால்,லட்சுமிப்பிரியா,குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments