Breaking News

மாவீரர் பொல்லான் சிலையுடன் கூடிய அரங்கம்... மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட ஜெயராமபுரத்தில் இடம் தேர்வு...

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேரூராட்சி, செலம்பகவுண்டன் பாளையத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று (28.12.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி  தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி,  ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி. சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில், மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  மற்றும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன்  ஆகியோர் தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் படைத் தளபதியான வீரர் பொல்லான் அவர்களின் 254-வது பிறந்த நாளையொட்டி, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.



இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் என்று அனைவராலும் போற்றப்படுகிற மரியாதைக்குரிய பொல்லான் அவர்களுடைய 254-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு அரசின் சார்பாக, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று (28.12.2022) நடைபெறுகிறது.

மாவீரர் பொல்லான் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு என்பது, நாட்டிற்கு மிகப்பெரிய தியாகம் செய்த தியாகியாக உள்ளார். மூன்று பெரிய போர்களிலே தீரன் சின்னமலை அவர்களோடு இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்கள். 

அதுமட்டுமல்லாது ஆங்கில அரசாங்கம், அவர்களுடைய படை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கிறது, என்னென்ன திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள் என்பதை எல்லாம் பொல்லான் அவர்கள் எப்படியோ அறிந்து தான் தீரன் சின்னமலை அவர்களிடத்திலே அதை தெரிவித்து, அவர்கள் இணைந்து, அந்த வெற்றியை பெறுவதற்கு மிகப்பெரிய உதவியாக இருந்தவர் மாவீரர் பொல்லான் அவர்கள் ஆவர்.

மேலும், மாவீரர் பொல்லான் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை இன்றைய சந்ததியினர் அறிந்திடும் வகையில் மொடக்குறிச்சி வட்டத்திற்குட்பட்ட ஜெயராமபுரத்தில் சுமார் 41.00 சென்ட் பரப்பளவில் சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான இடம் புலத்தணிக்கை மேற்கொண்டு சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அரசிற்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாகவும் இடம் தேர்வு செய்யப்படவுள்ளது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிதி ஒதுக்கீடு ஆணையினை பெற்று சிலையுடன் கூடிய அரங்கம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகள் விரைவில் துவங்கப்படும் எனவும் மேலும் இந்த இனிய நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அமைப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வி.சசிமோகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி. நவமணி கந்தசாமி, துணைத்தலைவர் திருமதி.கஸ்தூரி, துணை மேயர் வெ.செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர் பழனிச்சாமி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஸ்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.செந்தில்குமார், மொடக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், மொடக்குறிச்சி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரம் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments