Breaking News

இமாச்சல பிரதேச முதல்வராக பதவி ஏற்றார் சுக்விந்தர் சிங்

 சிம்லா, டிச.11-

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ். அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுக்விந்தர் சிங் சுகு இன்று இமமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.



இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதற்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் 75 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த ஓட்டுக்கள் கடந்த 8 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆட்சியில் இருந்த பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியது.

மொத்தம் 68 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் வென்றது. பாஜக 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பறிகொடுத்தது. மேலும் 3 சுயேச்சைகள் வெற்றி பெற்ற நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.



இமாச்சல பிரதேச மாநிலத்தை பொறுத்தமட்டில் கடந்த 1985ம் ஆண்டுக்கு பின்னர் எந்த ஒரு ஆளும் கட்சியும் மீண்டும் அடுத்த தேர்தலில் வென்றது இல்லை. இந்த தேர்தலிலும் அந்த டிரெண்ட் அப்படியே தொடர்ந்தது. அதன்படி பாஜக ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.

இதையடுத்து அங்கு முதலமைச்சராக பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மனைவியும் மாநில காங்கிரஸ் தலைவருமான பிரஷிபாசிங், கட்சியின் மூத்த தலைவர்கள் சுக் விந்தர் சிங், முகேஷ் அக்னிஹோத்ரி ஆகியோர் முதல்வராக பதவியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக காங்கிரஸ் மேலிடம் தேர்ந்தெடுக்க ஒப்புதல் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து நேற்று மாலை சிம்லாவில் மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜீவ் சுக்லா, சத்தீஷ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பிரதீபா சிங் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்துக்கு பின்னர் பூபேஷ் பாகல் நிருபர்களிடம் கூறுகையில், "இமாச்சல பிரதேச புதிய முதல்வராகவும், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவராகவும் சுக்விந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை முதல்வராக முகேஷ் அக்னி ஹோத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் எடுத்துள்ளது" என்று தெரிவித்தார். 

முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுக்விந்தர்சிங் சுகு, மாநில ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதன்படி இன்று மதியம் இமாச்சல பிரதேசத்தின் முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு முதல்வராக பதவியேற்றார். பிரதிபாவின் ஆதரவாளர்களில் ஒருவரான முகேஷ் அக்னி ஹோத்ரி துணை முதல்வராகவும் பதவியேற்றார். இருவருக்கும் ஆளுநர் ஆர்வி அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தற்போது முதல்வர் மற்றும் துணை முதல்வர் மட்டுமே பொறுப்பேற்றுள்ள நிலையில் விரைவில் அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள சுக்விந்தர் சிங் பஸ் டிரைவரின் மகன் ஆவார். இமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்த அவர் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு நெருக்கமானவர் ஆவார். இமாச்சல பிரதேசம் நாதஷன் தொகுதியில் வெற்றி பெற்று 4வது முறையாக எம்.எல்.ஏ.வாகியுள்ளார். 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தார்.

No comments

Thank you for your comments