நடுரோட்டில், குடிமகன்கள் அரங்கேற்றும் அலப்பறை... விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விருத்தாச்சலம், நெய்வேலி, பகுதிகளில் நாள்தோறும் போக்குவரத்துக்கு இடையூறாக, நடுரோட்டில், குடிமகன்கள் அரங்கேற்றும் அலப்பறையில், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். குடிமகன்களால் விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லக்கூடிய முக்கிய பிரதான வளைவு சாலையில், எழுந்திருக்க கூட முடியாத அளவில், அதிக மது போதையுடன், ஆபத்தான முறையில், நடுரோட்டில் அமர்ந்து கொண்டு, குடிமகன் ஒருவர் அலப்பறையில் ஈடுபட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் அவ்வழியாக செல்லக்கூடிய, வாகன ஓட்டிகளை அசிங்கமாக திட்டுவதால், பொதுமக்கள், எதுவும் செய்ய முடியாமல் முகசுளிப்புடன் செல்லும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாக இது போல் சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், மதியம் 12 மணிக்கு தான் மதுபான கடை திறக்கப்படும் என்ற நிலை மாறி, சமீப காலங்களாக விடிய விடிய மது பாட்டில்களின், விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதால், விடியற்காலையில் இருந்தே, குடிமகன்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நாள்தோறும் நடுரோட்டில் குடிமகன்கள் செய்யும் அட்டூழியத்தை தாண்டி, ஒரு கட்டத்தில், அதிக போதையில் சுய நினைவிழந்து, உடலில் துணி இல்லாமல் கூட, நிர்வாணமாக சாலை ஓரங்களில் படுத்து கிடப்பதால், அவ்வழியாக செல்லக்கூடிய பள்ளி, கல்லூரி மாணவிகள் முகத்தை மூடிக்கொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நெய்வேலி மட்டுமல்லாமல் விருத்தாச்சலம் நகரத்தில் உள்ள, பேருந்து நிலையம் , பாலக்கரை, ஸ்டேட் பேங்க் என டாஸ்மாக் கடைகள் எங்கெல்லாம் உள்ளதோ, அங்கெல்லாம் குடிமகன்களின் தொந்தரவால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பாதிப்பது மட்டுமில்லாமல், போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து ஏற்படும் சூழலும் உருவாகி வருகிறது.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் அலப்பறை செய்யும் குடிமகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
No comments
Thank you for your comments