டீ விற்றவர்.. டிக்கெட் வாங்காதவர்.. திமுக-பாஜகவினரிடையே டிவிட்டரில் அனல்பறக்கும் விமர்சனம்
சென்னை :
திமுகவின் ராஜீவ் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவை விமர்சித்துள்ளார் பாஜகவின் நாராயணன் திருப்பதி.
ரயில் நிலையத்தில் டீ விற்ற ஒரு சாமானியன் இன்று ஒட்டுமொத்த ரயில்வேயையே தனியாருக்கு விற்கும் நிலைக்கு உயர்ந்து உள்ளார் என பிரதமர் மோடியைச் சாடினார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி. அதற்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி, கருணாநிதி மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். இந்த வார்த்தை மோதல் ட்விட்டரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசிய நிலையில், "ரயில் நிலையத்தில் டீ விற்ற ஒரு சாமானியன் இன்று ஒட்டுமொத்த ரயில்வேயையே தனியாருக்கு விற்கும் நிலைக்கு உயர்ந்து உள்ளார் என்றால் அந்த மனிதரை பார்த்து படித்து தெரிந்துகொள்ளதானே வேண்டும்" என்று விமர்சித்துள்ளார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி.
இதற்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார். "ரயிலில் பயணம் செய்வதற்கு கட்டணமே செலுத்தாமல் (வித்தவுட்டில்) சென்ற சாமானியர்கள், அதே ரயிலில் சொகுசு 'சலூன் கோச்சில்' செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள் என்றால், அந்த சலூன் கோச்சில் அவர்களை பயணம் செய்ய வாய்ப்பளித்தவர்களை பார்த்து வியக்கத்தானே வேண்டும்?" எனத் தெரிவித்துள்ளார் நாராயணன் திருப்பதி.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சென்னை வரும்போது ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வந்தவர் என்பது பல காலமாக எதிர்க்கட்சியினர் சொல்லும் விமர்சனம். அதாவது, அப்படியான ஏழ்மை நிலையில் சென்னை வந்தவர், தமிழ்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றி, பணம் சம்பாதித்து விட்டார் என்பது அதன் பின்னுள்ள பொருள். ஆனால், அன்றைய காலகட்டத்திலேயே தமிழ் திரையுலகில் முன்னணி கதாசிரியராக, வசனகர்த்தாவாக புகழ்பெற்று பொருள் ஈட்டி வந்தவர் கருணாநிதி. சினிமா சம்பாத்தியத்தில் 27 வயதில் கார் வாங்கியவர் கருணாநிதி, அவர் வித்தவுட்டில் சென்னைக்கு வந்தார் என்பது மோசமான அவதூறு என்று திமுகவினர் பதிலடி கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், சமீபத்தில் அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தென்காசிக்குச் சென்றார். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக தென்காசிக்கு புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்டோரும் ரயிலில் பயணம் செய்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பயணித்த ரயில் பெட்டி சிறப்பு வசதிகள் அடங்கிய சலூன் கோச் பெட்டி. இந்த சலூன் கோச் பல்வேறு வசதிகளை கொண்டது. குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் இதை பிரத்யேகமாக உருவாக்கியது. உயர் பதவியில் இருப்பவர்கள் தான் இதில் பயணம் செய்ய முடியும் என்பது அல்ல. இதில் பயணம் செய்ய 2 லட்சம் ரூபாய் கட்டணம். இந்த கட்டணத்தை யார் செலுத்தினாலும் இதில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கழிவறை வசதி, இரண்டு படுக்கையறைகள், உணவு அருந்தும் இடம், சோபா , சமையலறை, டிவி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இந்த கோச்சில் இருக்கும். இந்திய ரயில்வேயிடம் மொத்தம் 336 சலூன் கோச் பெட்டிகள் உள்ளன. இப்படிப்பட்ட சிறப்புமிக்க சொகுசுமிக்க சலூன் கோச்சில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்ததால் கூடுதல் கவனம் பெற்றது. இந்நிலையில் தான் இதைக் குறிப்பிட்டு, திமுகவின் ராஜீவ் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாஜகவின் நாராயணன் திருப்பதி.
ரயிலில் பயணம் செய்வதற்கு கட்டணமே செலுத்தாமல் (வித்தவுட்டில்) சென்ற சாமானியர்கள், அதே ரயிலில் சொகுசு 'சலூன் கோச்சில்' செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளார்கள் என்றால், அந்த சலூன் கோச்சில் அவர்களை பயணம் செய்ய வாய்ப்பளித்தவர்களை பார்த்து வியக்கத்தானே வேண்டும்? https://t.co/UqkxzAyaVx
— Narayanan Thirupathy (@narayanantbjp) December 10, 2022
.jpg)
No comments
Thank you for your comments