முக்கிய மாநில செய்தி தொகுப்பு
டெல்லிக்கு 500 பேரை அனுப்பும் கமல்ஹாசன்
சென்னை, டிச.22-
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் 500 பேர் கொண்ட ஸ்பெஷல் குழுவை டெல்லிக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் தேர்தலுக்கு பின்பாக அந்த கட்சி பெரிதாக நம்பிக்கை அளிக்கவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் இருந்த நிர்வாகிகள் பலர் திமுகவிலும், அதிமுகவிலும், சில பாஜகவிலும் கூட இணைந்தனர். கட்சியின் டாப் நிர்வாகிகள் பலர் வெளியேறினர்.
இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக தயாராகிக்கொண்டு இருக்கிறது. கடந்த 16ம் தேதி கமல்ஹாசன் இது தொடர்பாக மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளிடம் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் கூட்டணி பற்றி பேசப்பட்டு இருக்கிறது. யாருடன் கூட்டணி வைக்கலாம், கூட்டணி வைத்தால் எத்தனை இடங்களை கேட்கலாம் என்றெல்லாம் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். பாஜக தரப்பிற்கு செல்வது சரியாக, காங்கிரஸ் கூட்டணியில் இணைவது சரியா என்று ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.
எம்பி தேர்தலில் போட்டியிடலாம் என்பது குறித்தும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதாவது எம்பி தேர்தலில் கூட்டணி சார்பாக நின்று டெல்லிக்கு செல்லலாமா என்றும் கமல்ஹாசன் ஆலோசனை செய்து இருக்கிறாராம். இந்த கூட்டத்தை நடத்தும்படி சொன்னது ஒரு அரசியல் ஆலோசகர் ஆவார். அவர்தான் நிர்வாகிகள் கூட்டத்தை நடத்துங்கள். மக்கள் நீதி மய்யம் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்தால் நன்றாக இருக்கும். இதை கட்சி கூட்டத்தில் சொல்லி அவர்களின் கருத்துக்களை பெறுங்கள். நீங்கள் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும், என்று ஆலோசனை வழங்கி இருக்கிறாராம்.
இதை கேட்டுத்தான் கமல்ஹாசன் அந்த கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொள்வது தொடர்பாகவும் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இதையடுத்தே கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர்.. நாங்கள் என்ன கூட்டணி வைக்க போகிறோம் என்பது உங்களுக்கு விரைவில் புரிய வரும். நான் என்ன திசையில் செல்கிறேன் என்று நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்களே என் பயணத்தை புரிந்து கொண்டால், நாங்கள் யாருடன் கூட்டணி வைக்க போகிறோம் என்பது புரிந்துவிடும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் நாங்கள் கலந்து கொள்வோம் என்றும் கூறினார். அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் டிசம்பர் 24ல் இந்த பேரணியில் பங்கேற்க உள்ளார். 100வது நாளை கடந்து உள்ள இந்த யாத்திரை டெல்லியை விரைவில் அடைய உள்ளது. இதில் 24ம் தேதி கமல்ஹாசன் டெல்லியில் கலந்து கொள்ள இருக்கிறார். கமல்ஹாசனின் இந்த முடிவு கவனம் பெற்றுள்ளது.
இதற்காக பெரிய அணியை கமல்ஹாசன் தேர்வு செய்து வருகிறார். பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் என்று பலரை அடங்கிய 500 பேர் கொண்ட குழுவை இதற்காக கமல்ஹாசன் இறக்க உள்ளாராம். அந்த ஆலோசகரின் அறிவுறுத்தலின் பெயரில் இவர்களை கமல்ஹாசன் தேர்வு செய்ய இருக்கிறாராம். இவர்களை டெல்லிக்கு அனுப்பி அவர்களுடன் இணைந்து கமல்ஹாசன் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாகும் விதமாக கமல்ஹாசன் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
✶✶✶✶✶
கொரோனா பரவல் தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டு வருகிறது
சென்னை, டிச.22-
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் சன்னாசிப்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சார்பில் ஒரு கோடியாவது பயனாளிக்கு தமிழ்நாடு மருந்து பெட்டகத்தை வழங்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று (டிச.21) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்,பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, துணை இயக்குனர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "வெளிநாடுகளில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேவையான அளவிற்கு பரிசோதனை மையங்கள் உள்ளன. சீர்காழியில் கால் அழுகல் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.
✶✶✶✶✶
மக்கள் செல்வாக்கை இழக்கும் சூழலில் அதிமுக
நிர்வாகிகள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு
சென்னை, டிச.22-
"அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எந்த நிலையிலும் எந்தக் காலக்கட்டத்திலும் அந்த மாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது" என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். மேலும், “கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கை அதிமுக இழக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நேற்று (டிச.21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியது: "நாம் சார்ந்திருக்கிற அதிமுக என்ற இயக்கம் ஒரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. நம் இயக்கம் நெருப்பில் பூத்த மலர். ஊழலை ஒழிக்க உயிர்த்த இயக்கம். லஞ்சப்பேர்வழிகளைத் தோலுரித்துக் காட்டிய கட்சி.
1972-ல் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். ஏழை எளிய மக்கள் நலம் காக்கத்தான் இந்த இயக்கத்தை உருவாக்கினார். எதிரிகளின் ஏச்சுக்களையும், ஏளனங்களையும் புறந்தள்ளி, அவர்கள் ஏற்படுத்திய இடையூறுகளை எல்லாம் தகர்த்து, மக்களின் ஆதரவோடு 10 ஆண்டு காலம் ஆட்சி செய்தார். அவரது மறைவுக்குப் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக 30 ஆண்டு காலம் பொறுப்பு வகித்து கட்சியை வழிநடத்தினார்.
எம்ஜிஆர் மறையும்போது 18 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு இந்த இயக்கத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கடுமையான உழைப்பு மற்றும் அவர் செய்த தியாகங்கள், இந்த இயக்கத்தை எந்தக் கொம்பாதி கொம்பனாலும் அசைக்கமுடியாத ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட எஃகு கோட்டையாக மாற்றினார்.
2016-ம் ஆண்டுக்குப் பிறகு, தமிழகத்தை ஆண்ட கட்சி மீண்டும் ஆளும் உரிமையை 32 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றுத் தந்த ஒரே தலைவி ஜெயலலிதாதான். 30 ஆண்டுகள் தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்யும் உரிமையைப் பெற்ற ஒரே இயக்கம். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த பெருமை எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் உண்டு. இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டராக இருப்பதே பெருமை என்ற நிலையை அந்த இருபெரும் தலைவர்களும் உருவாக்கித் தந்துள்ளனர்.
அப்படிப்பட்ட நம்முடைய இயக்கம், ஒரு மனிதாபிமானம்கூட இல்லாமல், சர்வாதிகார நிலையின் உச்சத்திலே நின்றுகொண்டு, நான் செய்வதுதான், கட்சியின் சட்டவிதி என்ற நிலையை அதிமுகவில் கொண்டுவர முயற்சி செய்து, இன்றைக்கு அது தோற்றுபோய் கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் செல்வாக்கை இழக்கின்ற ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது.
கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அந்த தீர்மானத்தை ரத்து செய்ய ஒருவருக்கு மனமிருந்தால், அவர்களை இந்த நாடு மன்னிக்குமா? எந்த நிலையிலும் எந்த காலக்கட்டத்திலும் அந்த மாபாவிகளை இந்த நாடு மன்னிக்காது" என்று அவர் பேசினார்.
முன்னதாக, அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து வருகிறது. ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்பதில் பழனிசாமி தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ் தனது பலத்தை காட்டும் வகையில், அதிமுகவின் 75 மாவட்டங்கள் மற்றும் இதர அணிகளில் தனது ஆதரவு நிர்வாகிகளை நியமித்தார். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளையும் நியமித்துள்ளார்.
இந்த நியமனத்தை தொடர்ந்து, அவர் தன் தரப்பு நிர்வாகிகளுடன் பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் காட்ட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். இதன் முன்னோட்டமாக அவர், மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தை நேற்று சென்னையில் கூட்டினார். கட்சியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரி, ரித்தர்டன் சாலையில் உள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நேற்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில் 88 மாவட்ட செயலாளர்கள் , நிர்வாகிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை வேப்பேரி, ரிதர்ட்டன் சாலையில் அமைந்துள்ள YMCA திருமண மண்டபத்தில் அஇஅதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் திரு.பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், இன்று (21-12-2022) நடைபெற்றது. pic.twitter.com/8CI9aLEPIb
— O Panneerselvam (@OfficeOfOPS) December 21, 2022
✶✶✶✶✶
தமிழ் கட்டாய பாடச் சட்டம் அமல் தொடர்பாக ஆய்வறிக்கை கோரிய வழக்கு-அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னை, டிச.22-
ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம் சட்டம் அமல்படுத்தியது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த ராகவன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழகத்தில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கி 2006-ம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007-08 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வகுப்பாக படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, 2015- 16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்த சட்டத்தை முறையாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழாசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்காததால், தமிழாசிரியர்களை நியமிக்க முடியவில்லை என பல அரசு உதவி பெறும் பள்ளிகள் புகார் தெரிவித்துள்ளன. 2015-16 ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட பாடத் திட்ட பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடச் சட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்த நிலையில் அதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மாநில மொழிகளைக் கட்டாயமாக்கிய சட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் அதற்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. தமிழ் கட்டாய பாடச் சட்டத்தில் அதுபோல எந்த பிரிவுகளும் இல்லை. இதனால் இந்த சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்த முடியவில்லை. இந்த சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தாததால், 2022-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவர்களில் 47 ஆயிரத்து 55 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர்.
எனவே, தமிழ் கட்டாய பாட சட்டம் அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு, தமிழக அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
✶✶✶✶✶
சென்னையில் டிச.24ம் தேதி திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் அறிவிப்பு
சென்னை, டிச.22-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 24ம் தேதி, சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும்.
அதுபோது அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்." என்று கூறப்பட்டுள்ளது.
✶✶✶✶✶
மின் இணைப்புடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி-ஐகோர்ட்
சென்னை, டிச.22-
அடிப்படை ஆதாரமற்ற முறையில், மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் நூறு யூனிட் மின்சாரத்துக்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது.அரசின் மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்த பின், புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை.
ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, வழக்கு எந்த அடிப்படை ஆதாரமற்ற முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, மின் நுகர்வோர் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
✶✶✶✶✶
கருவூலத்துறை அதிகாரிகளுக்கு பட்டயக்கணக்காளர் நிறுவனத்தில் பயிற்சி
சென்னை, டிச.22-
கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், தலைமை கணக்கு அதிகாரிகள் மற்றும் உதவி கணக்கு அலுவலர்கள் ஆகிய தரத்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளை பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களுக்கு நிதிக் கட்டுப்பாட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள், தலைமை கணக்கு அதிகாரிகளாகப் பணியமர்த்துகிறது.
இந்த அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த, தொடர்ச்சியான அறிவு பரிமாற்றம்தேவைப்படுகிறது.
இதன் அடிப்படையில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை மற்றும் நிதித் துறையில் உள்ள பிற துறை அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு முதன்மையான தொழில் முறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது மிகவும் உதவியாக இருக்கும்.
அந்த வகையில், நிதித் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் மற்றும் இந்தியபட்டயக் கணக் காளர்கள் நிறுவனத்தின் செயலர் இடையில், தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்ச்சியில், நிதித்துறை செயலர் நா.முருகானந்தம், கருவூலம் மற்றும்கணக்குத்துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவன செயலாளர் சி.ஏ.ஜெய்குமார் பத்ரா, நிதி மற்றும் கருவூல கணக்குத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.








No comments
Thank you for your comments