Breaking News

மத்திய அரசுக்கு எதிராக 12 எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூட்டாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

 டெல்லி, டிச.22- 

இந்திய - சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்று போராட்டம் நடத்தினர். நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்றனர். இதனை நமது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். சீனாவின் இந்த ஊடுருவல் முயற்சி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை

 இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறுவதால் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் இருசபைகளிலும் எழுப்பினர். 

இதனையடுத்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவின் அத்துமீறல் தொடர்பாக விளக்க அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆனால் சீனாவின் ஊடுருவல் தொடர்பாக இருசபைகளிலும் விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர். இதனால் சபை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பாக 12 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டாக போராட்டம் நடத்தினர். சீனாவின் ஊடுருவல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் ஒற்றை கோரிக்கை. இந்தப் போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ப.சிதம்பரம், திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ராஜ்யசபா தலைவரும் கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, லோக்சபா குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர். நாடாளுமன்ற மய்ய மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றத்தின் இருசபைகளும் கூடின. லோக்சபாவில், சீனாவின் ஊடுருவல் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சபையில் கடும் அமளி நிலவியது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபாவில் காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா பேசுகையில், பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பல மடங்கு எண்ணிக்கையில் டிரோன்கள் பறந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் பாகிஸ்தானில் இருந்து 200 டிரோன்கள் பறக்கவிடப்பட்டதால எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. 2021-ம் ஆண்டு 109 டிரோன்கள் பாகிஸ்தானால் எல்லையில் பறக்கவிடப்பட்டன. ஆகையால் டிரோன்களை அழித்தொழிக்கும் கட்டமைப்புகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சகம் முன்னுரிமை தர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், “நமது ராணுவம் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அரசியல் தலைமை குறித்தே நாங்கள் கேள்வி எழுப்புகிறோம். 

நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல அரசு கடமைப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த கடமையை அது செய்கிறதா? எல்லை நிகழ்வு குறித்து ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. அரசியல் தலைமையிடம்தான் நாங்கள் கோரிக்கையை வைக்கிறோம். விவாதம் நடத்தப்படுமானால், நிலைமையின் தன்மையை உணர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவாக நிற்கும். ஒன்றுபட்டு குரல் கொடுக்க முடியும்“ என தெரிவித்தார்.

மக்களவையில் அமளி 

மக்களவை நேற்று காலை 11 மணிக்குக் கூடியதும், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து விவாதித்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூடிய உடனேயே அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இந்திய-சீன எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து சில நாட்களுக்கு முன், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். இதையடுத்து, இது குறித்து கேள்விகள் எழுப்ப எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இந்த விவகாரம் குறித்து மக்களவையில் இருதினம் முன் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையைக் காக்கும் பணியை நமது ராணுவ வீரர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும், முன் எப்போதும் இல்லாத அளவு அங்கு படைகள் குவிக்கப்பட்டிருப்பதாகவும், எல்லையை சீனா தன்னிச்சையாக மாற்ற நமது ராணுவம் விட்டுவிடாது என்றும் குறிப்பிட்டார்.

No comments

Thank you for your comments