சமுதாய வளைகாப்பு... முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த கர்ப்பிணி பெண்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் சீர்வரிசை பொருட்கள் பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட கர்ப்பிணி பெண்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 07.05.2021 அன்று முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு மாநிலத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு மகளிரின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தற்போதைய மாறி வரும் சமுக பொருளாதார தேவையை நிறைவேற்றுவதற்காக பணிக்கு செல்லவும், சுயதொழில் செய்வதற்கும் போக்குவரத்து தேவை இன்றியமையாததை கருத்தில் கொண்டு தமிழக அரசு பணிபுரியும் மகளிர்க்கு பயணம் செய்ய இலவசமாக பயணச்சலுகை வழங்கப்படுகிறது.
மேலும், மருத்துவமனையில் பிரசவிக்கும் தாய்மார்கள் குழந்தை பிறந்து அரை மணி நேரத்திற்குள் தாய்க்கு, முதலில் சுரக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள சீம்பால் அளித்தல், 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே புகட்டுதல், 7ம் மாதம் முதல் இரண்டு வயது வரை தாய்ப்பாலுடன் சத்தான துணை உணவு வழங்குதல் என ஒரு குழந்தையின் முதல் 1000 நாட்கள் அவசியத்தை ஒவ்வொரு கர்ப்பிணியும் நன்கு புரிந்து கொள்ளும் வகையில் முதல் 1000 நாட்களில் அளிக்கப்படும் கவனிப்பே குழந்தையுடன் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
காஞ்சிபுரம்மாவட்டம், மாவட்ட திட்ட அலுவலகத்தின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு 2022 –2023
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10.10.2022 அன்று காஞ்சிபுரம் (கிராமபுறம்) - 300 கர்ப்பிணிகளுக்கும், காஞ்சிபுரம் (நகர்புறம்) - 200 கர்ப்பிணிகளுக்கும் குன்றத்தூரில் 400 கர்ப்பிணிகளுக்கும், ஸ்ரீபெரும்பத்தூரில் - 350 கர்ப்பிணிகளுக்கும், உத்திரமேருரில் - 350 கர்ப்பிணிகளுக்கும், வாலாஜாபாத் -300 கர்ப்பிணிகளுக்கும் என மொத்தம் 1900 கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்வில் ஜாதி, மொழி, இனம் என எந்த வேறுபாடுமின்றி அனைத்து கர்ப்பிணிகளையும் ஒரிடத்திற்கு அழைத்து மஞ்சள், குங்குமம், வளையல், பூ, மாலை போன்ற மங்கள பொருட்கள் அணிவித்து சீர்வரிசை தட்டு வழங்கி ஐந்து வகையான உணவு வகைகள், இனிப்பு, பழம் பரிமாறி கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அவர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே கர்ப்பகாலத்தில் பெண்களின் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளவும், பிறந்த குழந்தைகள் முதல் 1000 நாட்களில் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளவும், கர்ப்பகால பராமரிப்பு குறித்து அறிந்து கொள்ளவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த கர்ப்பிணி பெண் திருமதி.நந்தினி, கூறுகையில்
எனது பெயர் திருமதி. நந்தினி எனக்கு வயது 38 ஆகிறது நான் உத்திரமேரூர் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இதுவே முதல் கர்ப்பம் ஆகும். நான் கர்ப்பமாக உள்ளதாக கண்டறிந்ததிலிருந்து அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து எடை, உயரம் எடுத்தும், சத்துமாவு வாங்கியும் உண்டு வருகிறேன். மேலும், அங்கன்வாடி மையத்தில் நடத்தப்படும் சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில், கர்ப்பகால பராமரிப்பு குறித்த நிகழ்ச்சிகளிலும், ஊட்டச்சத்து மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்த நிழ்ச்சிகளிலும் நான் தவறாமல் கலந்து கொண்டேன்.
அந்நிகழ்ச்சிகள் மூலமாக கர்ப்பகால பராமரிப்பு, தன் சுத்தம் பேணுதல், கர்ப்பத்திற்கு தயாராகுதல், ஊட்டச்சத்து உணவுகளின் முக்கியத்துவம் போன்றவற்றை அறித்து கொண்டுஅவற்றை பின்பற்றியும் வருகிறேன்.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியாளர் என்னை அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது மனதிற்கு சந்தோசமாக இருந்தது. மேலும், இந்நிகழ்வில் அவரவர்கள் பின்பற்றும் உணவு பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளை எங்களுக்குள் பரிமாறிக் கொண்டோம். மேலும், மாண்புமிகு சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், அவர்களின் தலைமையில் எங்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சீர்வரிசைப் பொருட்களான மஞ்சள், சந்தனம், குங்குமம், பூ, வளையல், மாலை போன்ற மங்கள பொருட்கள், தட்டு, ரவிக்கை, துணி, தேங்காய், பழம் இனிப்புகளோடு ஐந்து வகை உணவுகள் பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. இந்த வாய்ப்பினை வழங்கிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த கர்ப்பிணி பெண் திருமதி. பவித்ரா கூறுகையில்,
எனது பெயர் பவித்ரா, நான் வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருகிறேன். நான் 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது வாலாஜாபாத் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய அங்கன்வாடி பணியாளர் அறிவுறுத்தியதன் பெயரில் பதிவு செய்தேன் அன்று முதல் அவர் என்னை தொடர்ந்து கவனித்து வருகிறார்.
எனக்கு சரிவிகித உணவு பற்றியும், அதன் மூலம் எனக்கும் என் குழந்தைக்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றி எடுத்துரைத்து, உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், குழந்தை பிறந்தது முதல் 1000 நாட்களில் நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். அங்கன்வாடி மையத்தில் வழங்கும் சத்துமாவின் பயன்களை எடுத்துக் கூறியதோடு மட்டும் இல்லாமல் அதை வெவ்வேறு விதமாக சமைத்து உண்பதற்கு செயல்முறை விளக்கம் தந்து தினமும் உண்பதற்கு ஊக்குவித்தார்கள்.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு:
திரு.ப.கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
திரு.எஸ்.சதீஷ்பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.


No comments
Thank you for your comments