காஞ்சிபுரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி
காஞ்சிபுரம்,டிச.17
காஞ்சிபுரம் அன்னை காமாட்சி அவின்யூ பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றரை வயதுடைய சிறுவன் சனிக்கிழமை பலியானதையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சி 49 வது வார்டுக்கு உட்பட்ட அன்னை காமாட்சி அவின்யூவில் வசித்து வரும் விஜயன் பிரியா தம்பதியரின் 18 மாத ஆண் குழந்தை சத்வீக். இச்சிறுவனுக்கு கடந்த 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்த சத்வீக் சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தார்.
🖱 நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு...
பட்டியலிட்டு பங்கம் செய்த பாஜக அண்ணாமலை
இத்தகவலறிந்து காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நத்தப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அன்னை காமாட்சி அவின்யூவில் சிறப்பு மருத்துவ முகாமையும் நடத்தினார்கள்.
இது குறித்து மாநகராட்சி சுகாதார அலுவலர் கூறுகையில் இப்பகுதியில் மொத்தம் 6 பேருக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. வீடு, வீடாக சென்று டெங்கு பரிசோதனைகளை செய்து வருகிறோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கியிருந்த இடங்களிலிருந்த கொசுக்களால் டெங்கு காய்ச்சல் வந்திருக்கலாம். எனவே பொதுமக்கள் வீடுகளுக்கு அருகில் தண்ணீரை தேங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் காய்ச்சிய குடிநீரை மட்டுமே அருந்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments
Thank you for your comments