காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்கள் சுற்றுப்பயணம்
காஞ்சிபுரம் மாவட்டம், வேளாண் துறையின்கீழ் விச்சந்தாங்கலில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணை மற்றும் உத்திரமேரூர், மலையாங்குளம் ஊராட்சியில் பழங்குடியினர்/இருளர் இனமக்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை இன்று (30.11.2022) செய்தியாளர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.
விச்சந்தாங்கலில் செயல்படுத்தப்பட்டுவரும் அரசு தோட்டக்கலை பண்ணையில் காய்கறி நாற்றுகள், மலர்பயிர், அழகு தாவரங்கள் மற்றும் கொய்யா பதியம் உள்ளிட்ட பண்ணை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் 25 இலட்சம் பண்ணை நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செடிகள், நாற்றுகள் மானிய விலையில் தோட்டக் கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இராசேந்திர சோழன் வரலாறு - கடல் கடந்த பயணம்
மேலும் இப்பண்ணையின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இயற்கை விவசாயம், காய்கறி பயிர் உற்பத்தி சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிகழ்வினை தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் திரு.தணிகைவேல் விவசாயின் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மூங்கில் பந்தல் காய்கறி தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சுரக்காய், பீர்க்கங்காய், பாகற்காய் ஆகிய பந்தல் காய்கறி பயிர்கள் சொட்டுநீர் பாசனம் மூலம் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்துவரும் தோட்டத்தினை பார்வையிட்டு, இத்திட்டத்தினை குறித்து விவரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா அவர்கள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த திட்டத்தினை செயல்படுத்திய விவசாயிகளுக்கு அரசு மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.1,20,000/- மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் துல்லிய பண்ணையம் இனத்தில் ரூ.15,000/- மதிப்புள்ள இடுப்பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியினர் (இருளர்) ஏழை மக்களுக்கு வீடு வழங்கப்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பழங்குடியினர் (இருளர்) எழை மக்களுக்கு 443 வீடுகள் ரூ.19.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்பட்டு வீடானது 269 சதுர அடியில் ஒரு வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறை வசதியுடன் கூடிய வீடுகள் ரூ.4.62 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
வருவாய் துறையினர் மூலம் இத்திட்டத்திற்கான பயனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பட்டா வழங்கி ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றது. மலையாங்குளம் கிராமத்தில் மட்டும் 178 வீடுகள் கட்டப்படுகின்றது.
இவ்விடத்தில் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பழங்குடியினர் (இருளர்) மக்கள் தோட்டநாவல் 11 நபர்களும், சடச்சிவாக்கம் 7 நபர்களும், ரெட்டமங்கலம் 17 நபர்களும், நெல்வேலி 17 நபர்களும், எலப்பாக்கம் 25 நபர்களும், நெய்யாடுப்பாக்கம் 12 நபர்களும், படூர் 2 நபர்களும், மலையாங்குளம் 8 நபர்களும், சிறுபினாயூர் 10 நபர்களும், தண்டரை 3 நபர்களும், எடையம்புதூர் 8 நபர்களும், கிடங்கரை 9 நபர்களும், கிளக்காடி 5 நபர்களும், ரெட்டைமங்கலம் 4 நபர்களும், பினாயூர் 1 நபரும். கட்டியாம்பந்தல் 7 நபர்களும், நாஞ்சிபுரம் 8 நபர்களும், திருமுக்கூடல் 22 நபர்களும் என மொத்தம் 18 கிராமங்களில் 178 பயனாளிகளுக்கு ரூ.7,78,62,540/- மதிப்பில் நிதி ஒதுக்கீட செய்யப்பட்டு 70% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இவர்களின் வீடுகளின் அருகிலேயே 1 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் செங்கல் சூளை அமைக்க மற்றும் மூலிகை செடிகள் பயிரிட இடம் அமைத்து தரப்பட உள்ளது. இதுதவிர அவர்களுக்கு அடிப்படை வசதிகளான நியாயவிலை கடை மற்றும் சமுதாயக்கூடம் போன்ற அனைத்து வசதிகளும் இவர்களுக்கு ஏற்படுத்தி தரயுள்ளது என செய்தியாளர் பயணத்தின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் சந்திப்பின்போது காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கனிமொழி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி துறை) திரு.ராஜராஜன், நேர்முக உதவியாளர் (வேளாண் துறை) திரு.கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.ப.கணேசன் மற்றும் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments