Breaking News

மாண்டஸ் புயலால் காஞ்சிபுரத்தில் பெரும் சேதம்.... இருவர் உயிரிழப்பு.. 110 வீடுகள் சேதம்.... ஆட்சியர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்,டிச.10

மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்திருப்பதுடன் 110 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் ஆட்சியர் மா.ஆர்த்தி சனிக்கிழமை தெரிவித்தார்.



மாண்டஸ் புயல் பாதிப்புகள் தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் மா.ஆர்த்தி,மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் இல.சுப்பிரமணியன், கூடுதல் கண்காணிப்பு அலுவலர்கள் டி.என்.ஹரிஹரன், சி.விஜயராஜ்குமார், காஞ்சிபுரம் எஸ்பி.எம்.சுதாகர் ஆகியோர் பல்வேறு இடங்களில் கூட்டாய்வு செய்தனர்.

இதன் பின்னர் எஸ்பி மற்றும் கண்காணிப்பு அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி காஞ்சிபுரத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் மேலும் கூறியது.

காஞ்சிபுரத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக 18 செ.மீ.மழை பெய்திருப்பது உட்பட மொத்தம் 80 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது.

பொதுப்பணித்துறையின் கட்டுபாட்டில் உள்ள 381 ஏரிகளில் 146 முழுமையாகவும், ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 380 ஏரிகளில் 135 ஏரிகள் 75 சதவிகிதமும் 6 ஏரிகள் முழுக் கொள்ளவையும் எட்டியிருக்கின்றன. 

110 வீடுகள் சேதமடைந்திருக்கின்றன.  31 கால்நடைகளும், 2680 கோழிகளும் உயிரிழந்துள்ளன. 

மாவட்டம் முழுவதும் 65 மையங்களில் 278 குடும்பங்களைச் சேர்ந்த 2240 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர்,உணவு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கத்தில் மரம் சாய்ந்து மின்கம்பி மீது விழுந்ததில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களான சுபன்குமார்(23) நிரஞ்சன்குமார்(22) இருவர் உயிரிழந்துள்ளனர். 

பலத்த காற்று வீசியதன் காரணமாக மாவட்டம் முழுவதும் 203 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இவற்றில் 151 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டன. சாய்ந்து விழுந்து கிடந்த மரங்களை அகற்றியதில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையின் பணி பாராட்டுக்குரியது. 

117 மின்கம்பங்கள் சாய்ந்தும், 25 தெருவிளக்குகள் பழுதாகியும் இருந்தன. இவற்றை மின்வாரியத்தினர் இரவோடு இரவாக சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது பணியும் பாராட்டுக்குரியதாகவே இருந்தது.

கனத்த மழையின் காரணமாக தாமல் ஏரியிலிருந்து அதிகமான நீர் வெளியேறி எம்ஜிஆர்.நகர், முருகன் நகர், தேனம் பாக்கம், தட்டித் தோப்பு ஆகிய பகுதிகளில் இருந்த குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று விட்டது.வரதராஜபுரம், குன்றத்தூர், மாங்காடு ஆகிய பகுதிகளிலும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் சென்று விட்டது.தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.வேளாண் பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து வருவதாகவும் ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்தார்.

 

No comments

Thank you for your comments