Breaking News

மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்?-நிதி அமைச்சர் பிடிஆர்

சென்னை :

மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் 85% சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.


மதுரை ஆரப் பாளையத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக் கழிப்பறை கட்டிடங்களை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். 

 

🖱விமர்சனம் வரத்தான் செய்யும்... உதயநிதியின் அமைச்சர் பதவி குறித்து ஸ்டாலின் பேச்சு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது ஆட்சிக் காலத்தில் நிதி நிலை சிறப்பாக முன்னேறியது. ஜெயலலிதா சிறைக்கு சென்றது, உடல்நலம் சரி இல்லாமல் போனது மற்றும் அவரது மறைவுக்குப் பிறகான 7-8 ஆண்டுகளில் நிதிநிலை மிகவும் மோசமடைந்தது. உற்பத்தியில் 27% கடனுக்கும், 20% வட்டிக்கும் செலவிடப்பட்டது.

திமுக அரசு அமைந்த முதல் ஆண்டே நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கு ஒருமுறை மாநிலத்தின் மொத்த வரவு - செலவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில், சில குழப்பங்கள் உள்ளன. பல திட்டங்களை மத்திய அரசின் திட்டம் என்று சொல்கின்றனர். ஆனால், மத்திய அரசின் பணம் எதுவும் முழுமையாக அளிக்கப்படுவது இல்லை. திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்கு நிதி வராமல் உள்ளதால், திட்டத்தை செயல்படுத்த முடியாத சிக்கலும் உள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட்ட நிதிநிலை ஆய்வு குறித்த கூட்டம் திருப்தியாக இருந்தது. அதன் அடிப்படையில் 2022-23 நிதியாண்டில் மிகச் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். 

பொறுப்புள்ள நிதி மேலாண்மை சட்டத்தின் அடிப்படையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமல்படுத்திய விஷன்-2023 என்ற திட்டம் நல்ல திட்டம். அதனை நாங்களும் பின்பற்ற விரும்புகிறோம்.

2022-23 நிதியாண்டில் உற்பத்தி ரூ.24 லட்சம் கோடியாகவும், 2024-25 நிதியாண்டில் ரூ.30 லட்சம் கோடியாகவும் இருக்கும். இதே வளர்ச்சி தொடரும் பட்சத்தில் 2025-26 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய வாய்ப்புள்ளது.

மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான தரவுத் தளம் அமைத்தல், பயனாளர்களின் உண்மைத் தன்மையை ஆராய்தல் உள்ளிட்ட பணிகள் 85% நிறைவு பெற்றுள்ளன. அதனை 2023 பட்ஜெட்டில் அறிவிப்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார்" என்று அவர் கூறினார்.

No comments

Thank you for your comments