Breaking News

அகல் விளக்குகளுக்கு, வியாபாரிகள் மத்தியில், போதிய விலை கிடைக்கவில்லை என செராமிக் உற்பத்தியாளர்கள் வேதனை...

மூலப் பொருட்களின் விலை உயர்வு,  மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளிலும், தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளுக்கு, வியாபாரிகள் மத்தியில்,  போதிய விலை கிடைக்கவில்லை  என செராமிக் உற்பத்தியாளர்கள் வேதனை.


தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில், பீங்கான் பொருட்களை தயாரிக்க கூடிய, செராமிக் தொழிற்பேட்டையானது  கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் நகரத்தில் அமைந்துள்ளது.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில், 1964 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இத்தொழிற்பேட்டையானது, தொழில் வணிகத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் (சிட்கோ) இயங்கி வருகிறது.


ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்துவரும் இத்தொழிற் பேட்டையில், பல்வேறு வடிவிலான அகல்விளக்குகள், பீங்கான் பொம்மைகள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

இங்கு தயாரிக்கக்கூடிய பீங்கான் பொருட்களை தமிழக மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பீகார் உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகளும் வந்து வாங்கி செல்கின்றனர்.

அவ்வாறு சிறப்பு வாய்ந்த செராமிக் தொழிற்பேட்டை-யை, தமிழக அரசு கண்டு கொள்ளாமல் உள்ளதால், மிகவும் நலிவடைந்து, செராமிக் தொழிற்பேட்டை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

🔥மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்புகளில்
 4 விழுக்காடு இட ஒதுக்கீடு-முதலமைச்சர் ஸ்டாலின் உரை

ஏனென்றால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, பீங்கான் பொருட்களுக்கு தேவையான மூலப்பொருட்களை, தமிழக அரசே உற்பத்தி செய்து கொடுத்து வந்த நிலையில், மூலப் பொருட்களை கொடுத்து வந்த அரசு நிறுவனம் மூடப்பட்டதால், தற்போது அதிக விலை கொடுத்து, தனியார் நிறுவனத்திடம் வாங்கும் அவல நிலைக்கு செராமிக் உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறு உள்ள செராமிக் உற்பத்தியாளர்கள்கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்து, தற்போது வரை தங்களால் மீண்டு வர முடியவில்லை என்றும், மூலப் பொருட்களின் விலை, ஃபயரிங் விலை, ஆயில் விலை என அனைத்தும் அதிகரித்து விட்டதாகவும், தற்போது கார்த்திகை தீபத்துக்கு கூட, சரியான முறையில் அகல் விளக்குகளை உற்பத்தி செய்ய முடியவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு,  மின்கட்டண உயர்வு, ஆட்கள் கூலி, வாடகை உள்ளிட்டவைகளை கணக்கீடு செய்து,  தயாரிக்கப்பட்ட அகல்விளக்குகளின் விலையை நிர்ணயம்  செய்தால்,  அதிக விலைக்கு, பெற்றுக்கொள்ள வியாபாரிகள் முன் வர மறுப்பதாகவும், இதனால் வியாபாரிகள் கேட்கின்ற விலைக்கு, அகல் விளக்குகளை தள்ளிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

மூலப் பொருட்களின் விலை உயர்வால்,  கார்த்திகை தீபம் மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களுக்குத் தேவையான அகல் விளக்குகளை தயார் செய்து கொடுக்க முடியவில்லை என்றும்,  பல்வேறு இன்னலுக்குப் பின்பு, அகல் விளக்குகளை தயார் செய்தால் கூட வியாபாரிகள் மிகக் குறைவான விலைக்கு கேட்பதினால், முதலீடு செய்த பணத்தைக் கூட எடுக்க முடியாத நிலை உள்ளதினால்,  பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, நேரடி கவனம் செலுத்தி,  மூலப் பொருட்களை தமிழக அரசே தயாரித்து தர வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைக்கிறனர். 

மேலும் செராமிக் தொழிற்பேட்டையில் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் தினக்கூலியாக வேலைக்கு வருவதாகவும், அவ்வாறு வரக்கூடிய பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை எனவும், மது பிரியர்களின் அட்டகாசம் அதிகமாக இருப்பதினால், செராமிக் தொழிற் பேட்டையில்,  பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில்,  சிசிடிவி கேமரா மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென கோரிக்கை வைக்கிறனர்.

No comments

Thank you for your comments