Breaking News

ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருதரங்கில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகையும் சான்றிதழ்கள் வழங்கல்

தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருதரங்கம் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பெறுகின்றன. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.11.2022 மற்றும் 16.11.2022 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள  கூட்ட அரங்கில் நடைபெற்றன. 


15.11.2022 அன்று காலை 10.00 மணியளவில் பயிலரங்கம் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி பொ. பாரதி அவர்கள் வரவேற்புரையாற்றினார்.   காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.கோ. புண்ணியக்கோட்டி அவர்கள் தலைமையுரையாற்றினார்.

ஆட்சிமொழிச் சட்டமும், அரசாணைகளும் என்ற பொருண்மையில் வேலூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருமதி ப. இராஜேசுவரி அவர்களும், மொழிப்பயிற்சி என்ற பொருண்மையில் முனைவர் பா. கதிரவன் அவர்களும், தமிழில் ஆட்சிச் சொற்கள் அன்றும் இன்றும், மொழிப்பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் என்ற பொருண்மைகளில் மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு அவர்களும், தமிழில் குறிப்புகள் வரைவுகள் உருவாக்கல் என்ற பொருண்மையில் காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி பொ. பாரதி அவர்களும், ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைதலும் என்ற பொருண்மையில் சேலம் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்   திருமதி க. பவானி அவர்களும் பயிற்சி வழங்கினார்கள்.

ஆட்சிமொழிக் கருத்தரங்கம் 16.11.2022 அன்று பிற்பகல் 04.00 மணியளவில் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி பொ. பாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.    

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் அவர்கள் 2020-ஆம் ஆண்டில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய வாலாஜாபாத் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கண்காணிப்பாளர் திரு. இரா. துரை அவர்களுக்கு பரிசுத்தொகை ரூ.3000/- க்கான காசோலை வழங்கியும், ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு நடத்தபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி  மாணவ / மாணவியருக்கு முதல் பரிசு ரூ.5000/- இரண்டாம் பரிசு ரூ.3000/- மூன்றாம் பரிசு ரூ.2000/- மற்றும் அரசுப் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களை தெரிவு செய்து சிறப்புப் பரிசாக ரூ.2000/-ற்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியும், ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் குறித்த மகிழ்வுரை வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி வெ. வெற்றிச்செல்வி, மேனாள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் திரு. கூ.வ. எழிலரசு,  பச்சையப்பன் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் மு. நஜ்மா மற்றும் உலகப் பொதுமறை திருக்குறள் பேரவை நிறுவனர் திரு. குறள் அமிழ்தன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.  காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் உதவியாளர் திரு ஏ. பொன்னுரங்கம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments