வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களிடையே பாதுகாப்பு விழிப்புணர்வு
மழைகாலத்தில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது. மழையாலும் பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்கம்பி அருகில் செல்லக்கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடாதீர்கள். அவ்வாறு அறுந்து கிடந்தால் அதுபற்றி உடன் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
மின்பெட்டி (Pillar Box) அருகில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்லக்கூடாது. அவ்வாறு தேங்கி இருந்தால் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி. மின்னலின் போது வெட்டவெளியில் நிற்கக்கூடாது. உடன் கான்கிரீட் கட்டடம், வீடுகளிலோ, உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களிலோ தஞ்சமடையவேண்டும். இடி, மின்னலின் போது மரத்தின் அடியிலோ பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழே நிற்க வேண்டாம்.
தஞ்சமடைய எதுவும் இல்லாத நிலையில் மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத தாழ்வான பகுதியை தேர்வு செய்ய வேண்டும். இடி, மின்னலின் போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை விட்டு அகலவேண்டும். டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, தொலைபேசி ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது.
திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகில் நிற்கக்கூடாது. ஸ்டேகம்பி மற்றும் மின் கம்பங்களில் கொடி கயிறு கட்டக்கூடாது. ஆடு, மாடு போன்ற விலங்குகளையும் கட்டக்கூடாது.
மின்தடை புகார்களுக்கு மின்னகம் 9498794987 என்ற 24 மணி நேரமும் செயல்படும் செல்போன் சேவையை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என கூடுதல் தலைமை பொறியாளர் திரு.கி.ஷண்முகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments