பாலாற்றில் மணலில் சிவலிங்கம் அமைத்து சிவனடியார்கள் வழிபாடு
காஞ்சிபுரம், நவ.17-
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் சிவனடியார்கள் ஏராளமானோர் மணலில் சிவலிங்கம் அமைத்து வியாழக்கிழமை சிறப்பூ பூஜைகள் செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி சிவனடியார்கள் மணலில் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.கால் ஊனமுற்ற சிவனடியார் ஒருவருக்கு சிவன் பாலாற்றில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் காட்சி கொடுத்ததை நினைவு கூறும் வகையில் முடவன் முழுக்கு என்ற பெயரில் இவ்விழா ஆண்டு தோறும் நடந்து வருகிறது.இதனையொட்டி காஞ்சிபுரத்தில் வசிக்கும் ஏராளமான சிவனடியார்கள் பாலாற்றில் நீராடி மணலில் சிவலிங்கம் அமைத்தும், சிவபூஜைகள் செய்தும், சிவபுராணம் படித்தும் வழிபாடுகளை செய்தனர்.
திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ஜெ.கவியரசு தலைமையில் சிறப்பு வழிபாடுகளும் நடந்தன.ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் அலங்கார வடிவம்,மணலால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு மயில் சிவபூஜை செய்தல், விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட தெய்வங்களும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோ.பூஜை, அசுவபூஜை, கன்னியாபூஜை, தம்பதியர் பூஜை ஆகியனவற்றை இ.ரவிச்சந்திர குருக்கள் நடத்தினார். ஆன்மீகச் சொற்பொழிவாளர் சக்தி.பு.கந்தன் காஞ்சிபுரத்தின் சிறப்புகள் குறித்து பேசினார்.
பாலாற்றில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சிவனடியார்கள் ஏராளமானோர் தனித்தனியாக மணலில் சிவலிங்கம் வடிவில் அலங்கரித்தும், சிவபுராணம் வாசித்தும் சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர்.
காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் பகுதியில் உள்ள தீப்பாஞ்சி அம்மன் கோயில் பூஜகரும், திருநங்கையுமான கஜலட்சுமி தலைமையில் 10க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் சிவலிங்கம் அமைத்து சிவபூஜை செய்து வழிபட்டனர்.

.jpg)
No comments
Thank you for your comments