முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் பயன்பெற்ற பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா 22.11.2022 அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.திரு.கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால் ரூ.30.83 இலட்சம் தொகையில் 244 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ஏழை, எளிய இஸ்லாமிய பெண்கள் 47 நபர்களுக்கு ரூ.5.70 இலட்சம் தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் ஏழை, எளிய கிறித்துவ பெண்கள் 101 நபர்களுக்கு ரூ.20 இலட்சம் தொகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய சிறுபான்மையின பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற 25 நபர்களுக்கு ரூ.1.54 இலட்சம் தொகையில் இலவச மின் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.

முதலமைச்சர் அவர்களால் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதிவு பெற்ற உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் 51 நபர்களுக்கு ரூ.2.62 இலட்சம் தொகையில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற 20 நபர்களுக்கு ரூ.0.97 இலட்சம் தொகையில் இலவச சலவைப்பெட்டிகள் வழங்கப்பட்டது.
மேலும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.திரு.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் சிறுபான்மையினர் மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கீழ்கண்டவாறு சிறப்புரையாற்றினார்.
Ø மாவட்டந்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிறித்துவ மற்றும் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
Ø உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் போலவே கிறித்துவ பணியாளர் நல வாரியம் உருவாக்கப்படுகிறது.
Ø புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
Ø ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள அருட்சகோதரிகளுக்கு ரூ.60,000/-ம் மற்றவர்களுக்கு ரூ.37,000/-ம் மானியம் வழங்கப்படுகிறது.
Ø உலமாக்களுக்கு ஸ்கூட்டி வாங்க ரூ.25,000/- மானியம் வழங்கப்படுகிறது.
Ø பழமை வாய்ந்த தேவாலயங்களை பழுது நீக்க அதிகபட்சம் ரூ.3 இலட்சம் வீதம் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Ø கிறித்துவ மற்றும் முஸ்லீம் சமூகத்தினருக்கான அடக்கஸ்தலம், கபரஸ்தான் அமைக்க அரசு புறம்போக்கு நிலங்களில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு அரசு புறம்போக்கு நிலம் கிடைக்கப்பெறாதபட்சத்தில் தனியார் நிலங்களை பேச்சுவார்த்தை மூலம் கையகப்படுத்தி அரசின் பங்களிப்புடன் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
Ø உலமாக்கள் ஓய்வூதிய திட்டத்துடன் உலமாக்கள் இறந்தால் அவர்களது குடும்பத்தினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Ø சிறுபான்மையின மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்க டாம்கோ மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக பயனடைந்த பயனாளிகள் தெரிவித்ததாவது:
உத்திரமேரூரைச் சார்ந்த எச்.பாத்திமா பீ ஆகிய நான் எவ்வித வாழ்வாதாரமும் இன்றி இருந்த நிலையில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக எனக்கு ரூ.10,000 உதவித்தொகை கிடைத்தது இதை வைத்து நான் கட்பீஸ் கடை வைத்து யாருடைய தயவும் இல்லாமல் நான் என் வாழ்வில் முன்னேறுவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. இதனால் என்னுடைய வாழ்வாதாரமும் உயர்ந்துள்ளது. எனவே இந்த உதவி என்னை வந்தடைவதற்கு நான் மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதற்காக நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
உத்திரமேரூரைச் சார்ந்த நசீமா ஆகிய நான் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்து வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வந்துள்ளேன். இந்நிலையில் முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலமாக எனக்கு ரூ.10,000 உதவித்தொகை கிடைத்தது. அந்தப்பணம் மூலமாக சிறிய இட்லி கடை வைத்தேன். அந்த கடை மூலமாக வழி தெரியாமல் இருந்த என் வாழ்க்கையில் ஒரு விடிவெள்ளி பிறந்தது போன்று இருந்தது. இந்த கடை மூலமாக நான் என் வாழ்வாதாரத்தை முன்னேற்றி கொண்டேன். இதற்காக நான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தொகுப்பு:
திரு.ப.கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம்.
திரு.எஸ்.சதீஷ் பாபு, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), காஞ்சிபுரம்.


No comments
Thank you for your comments