நியாய விலை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
மேலூர் அருகே நியாய விலை கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்...தரமற்ற முறையில் பொருட்கள் வழங்கப்படுவதாக புகார் .
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டி கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டி கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால்,வேறு வழியின்றி கடையை பூட்டிவிட்டு ஊழியர் தப்பி ஓடினார்
கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கேசம்பட்டி ஊராட்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளை கொண்ட நியாய விலை கடை இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக தரமற்ற முறையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், நேற்று வழங்கப்பட்ட அரிசியும் உணவருந்த முடியாத நிலையில் இருந்ததால் திடீரென அரிசியை சாலையில் கொட்டிய பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது, அதனை அடுத்து நியாய விலை கடையை பூட்டிவிட்டு ஊழியர் ஓடி விட்டார். தங்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்றும் அளவீடுகள் முறையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த பொதுமக்கள் தற்போது வழங்கப்பட்டுள்ள அரிசியை சமைத்து உண்பதன் மூலம் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டினர்.
எனவே நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments
Thank you for your comments