காஞ்சிபுரத்தில் தொடர்மழை... 3 வீடுகள் சேதம்
காஞ்சிபுரம்,நவ.2
காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமையும் 2 வது நாளாக தொடர்மழை காரணமாக 2 குடிசை வீடுகள் ஒரு ஒட்டு வீடு ஆகியன உட்பட புதன்கிழமை 3 வீடுகள் சேதமடைந்துள்ளது.
வடகிழக்குப்பருவமழையின் தீவிரம் காரணமாக செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.
புதன்கிழமையும் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்ததால் 2வது நாளாகவும் பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி அறிவித்திருந்தார்.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 24 ஏரிகள் 100 சதவிகிதமும்,76 முதல் 99 சதவிகிதம் வரை 24 ஏரிகளும்,51முதல் 75 சதவிகிதம் வரை 90 ஏரிகளும் நிரம்பியிருந்தன.26 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரை 192 ஏரிகளும்,50 சதவிகிதத்துக்கும் குறைவாக 25 க்கும் மேற்பட்ட ஏரிகளும் நிரம்பியிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் நகரில் ரயில்வே சாலை,அரசு மருத்துவமனை சாலை,ஒலிமுகம்மது பேட்டை,திருக்காலிமேடு ஆகிய பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.பழைய ரயில் நிலையம் முன்பாக பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக மழைநீர் தேங்கி நின்றதில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டியிருந்தது.
மழையளவைப் பொறுத்தவரை காலை 8 மணி வரை 8 மி.மீ,10 மணி வரை 15.80 மி.மீ,நண்பகல் 12 மணி வரை 11.20 மி.மீ, நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை 44.20 மி.மீ,மதியம் 2 மணி முதல் 4 மணி வரை 4 மி.மீட்டரும் மழை பதிவாகியிருந்தது.மாலை 4 மணி வரை மொத்த மழையளவாக 83.20 மி.மீட்டரும்,சராசரி மழைப் பதிவாக 13.87 மி.மீட்டரும் பதிவாகியுள்ளது.மாலையில் வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குணகரம்பாக்கத்தில் 2 குடிசை வீடுகளும் ஒரு ஒட்டு வீடும் இடிந்துள்ளது.
கோட்டூரில் ஒரு ஆடு,மதுரமங்கலத்தில் ஒரு மாடு மற்றும் வாலாஜாபாத்தில் ஒரு கன்றுக்குட்டி ஆகியவும் உயிரிழந்துள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை 3 வீடுகள் சேதமடைந்தும்,3 கால்நடைகள் உயிரிழந்தும் உள்ளதாக ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படவிளக்கம்..காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் முன்பாக தேங்கியிருந்த மழைநீரில் சென்ற கார்



No comments
Thank you for your comments