காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு - பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி!
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் 7,897 வாக்குகளுடன் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்றார். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக அவர் தேர்வாகியுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் 1072 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், திருவனந்தபுரம் எம்.பி சசிதரூரும் போட்டியிட்டனர். தேர்தலுக்காக நாடு முழுவதும் 65 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது.
காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் இதில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் 96 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப் பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் வைத்து தொடங்கியது. மதியம் 1 மணியளவில் வாக்குகள் எண்ணிக்கை நிறைவடைந்தது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1072 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதன்படி, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வாகியுள்ளார். கடந்த 24 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திரா காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்பது இதுவே முதல்முறை.
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாகவே, காங்கிரஸ் புதிய தலைவர் குறித்து இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருக்கும் ராகுல் காந்தியிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆந்திராவில் யாத்திரையில் இருக்கும் அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.
அப்போது, “காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரே கட்சியில் எனது பணி என்ன என்பதை தீர்மானிப்பார். அதை கார்கே ஜி, சோனியா ஜியிடம் கேளுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கார்கேவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள சசிதரூர், "அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராய் இருப்பது சிறந்த பெருமை மற்றும் பெரிய பொறுப்பு. இந்தப் பொறுப்பில் வெற்றி பெறவேண்டும் என்று கார்கே ஜியை நான் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தேர்தலில் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்று சசிதரூர் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி தேர்தல் பொறுப்பாளருக்கு கடிதமும் எழுதி இருந்தனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், அதில் போட்டியிடப்போவதாக சசி தரூர் விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்காக அவர் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அவரை எதிர்த்து ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
கட்சியின் ஒரு தலைவர் ஒரு பதவி என்ற கொள்கைப்படி அவர் தனது முதல்வர் பதவியை துறக்க விரும்பாத நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து திக்விஜய் சிங் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். கடைசி நேரத்தில் அவரும் விலகி விட, இறுதியில் போட்டியில் இணைந்த மல்லிகார்ஜூன கார்கே 90 சதவீத வாக்குகள் பெற்று காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வாகி உள்ளார்.
Many congratulations to Shri @kharge for being elected as the President of Indian National Congress.
— Congress (@INCIndia) October 19, 2022
Best wishes from the entire Congress family!#CongressPresidentKharge pic.twitter.com/PbGyNf0HRe
No comments
Thank you for your comments