மாணவர்களை கண்டித்து சாலையில் பஸ்சை நிறுத்தி போக்குவரத்து ஊழியர் போராட்டம்
காஞ்சிபுரம் அருகே மாணவர்களை கண்டித்து சாலையில் பஸ்சை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நடத்திய போராட்டம் பரபரப்புக்குள்ளானது.
தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் பேருந்து மற்றும் ரயில் பயணங்களில் செய்யும் அராஜக செயல்களால் அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கல்வி ஆர்வலர்கள் என பலர் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கங்களுக்கும், குற்ற செயல்களும் ஈடுபட்டு வருவது தற்போது அதிகரித்து வருவதும் அவ்வப்போது காவல்துறை தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நன்னடத்தை விதிகள் அறிவிக்கப்பட்டும், இது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்குவதும் தமிழகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில்.காஞ்சிபுரம் நகரில் அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் என பல உள்ளதால் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மேல் கல்விக்காக காஞ்சிபுரம் நகருக்கு அதிக அளவில் மாணவர்கள் வருகை புரிகின்றனர்.
காஞ்சிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை - 2 ன்கீழ் டி- 35 என்ற எண் கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.இன்று வழக்கம்போல் ஓட்டுநர் கோதண்டம் மற்றும் நடத்துனர் மகேஷ் ஆகியோர் பணியில் இருந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால் , காஞ்சிபுரம் - உத்தரமேரூர் சாலையில் மாகரல் குறுகிய வழித்தடத்தில் இயக்க நேர கண்காணிப்பாளர் அறிவுறுத்தியதின் பேரில், சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு மாநகரல் நோக்கி பேருந்து புறப்பட்டு சென்றது.
ஓரிக்கை , காந்திநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் இரு படிக்கட்டிலும் நின்ற மாணவர்கள் சாலையில் காலை தேய்த்தபடியும் , தொங்கிக்கொண்டு அராஜக செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள்.இதனை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தட்டிக் கேட்டபோது தகாத வார்த்தையில் அவர்களை வசை பாடியுள்ளனர்.
பலமுறை எடுத்துச் சொல்லியும் இதை சற்றும் உணராமல் இருந்ததால் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டனர்.உடனே அப்பகுதியாக வழியாக வந்த பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது, நடத்துனர் நடந்த சம்பவத்தை கூறியதால் பொதுமக்களும் மாணவர்களை தட்டிக்கேட்டனர்.20 நிமிட போராட்டத்திற்கு பின் மாணவர்கள் ஓட்டுனரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதின் பேரில் பேருந்து மீண்டும் வழித்தடத்தில் இயங்கியது.
சம்பவம் குறித்து ஓட்டுனர் கோதண்டம் கூறுகையில் , கடந்த சில வருடங்களாகவே அரசு போக்குவரத்து கழக பஸ்களில் பயணம் செய்யும் மாணவர்களின் செய்கை அராஜகமாக உள்ளது.மாணவர்களை பேருந்தில் ஏற்றி சொல்லும் போது அதிக மன உளைச்சலுடன் தான் பேருந்தை ஓட்டுகிறோம் எனவும் ஏதேனும் விபத்து நடந்தால் முழு பொறுப்பும் போக்குவரத்து ஊழியர்கள் மீது திரும்புவது பெரிதும் மனக்கவலையை அளிக்கிறது எனவும் தெரிவித்தார்.
காலை மற்றும் மாலை நேரங்களில் நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து காவலர்கள் பணி மேற்கொண்டு வரும் நிலையிலும் அவ்வப்போது இது குறித்து மாணவர்களுக்கு எச்சரித்து அனுப்பும் நிலையிலும் இது போன்று ஓட்டுனர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் மாணவர்கள் தங்களது செயலை நிறுத்தி கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments