Breaking News

முக்கிய செய்தி தொகுப்பு

 திமுகவை வீழ்த்த ஓபிஎஸ் உடன் கூட்டணி அமைக்க தயார் - டிடிவி தினகரன் 

சென்னை, அக்.13-

திமுகவை வீழ்த்த ஓபிஎஸ்-ன் அழைப்பை ஏற்று கூட்டணிக்குச் செல்ல தயாராக இருப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.



சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் அதிமுக ஒன்றிணைவது தொடர்பாக ஓபிஎஸ் விடுத்த அழைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " நாங்கள் அனைவரும் ஒருதாய் மக்களாக இருந்தது உண்மை. அவர்கள் எங்களை வெளியேற்றியதால் தனி இயக்கத்தை தொடங்கினோம். எனவே இனிமேல் அவர்களுடன் சென்று ஒன்றாக இணைவது என்பது எங்களுக்கும் நல்லதல்ல, அவர்களுக்கும் நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன்.


ஓபிஎஸ் கூட்டணிக்கு வாருங்கள் என்றுதான் அழைப்பு விடுத்துள்ளார். அவருடைய கருத்தை நான் வரவேற்கிறேன் என்று ஏற்கெனவே கூறியுள்ளேன். திமுக என்ற தீயசக்தியை எதிர்ப்பதற்காக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போதே நான் விட்டுக்கொடுத்தேன். ஆனால் ஒரு சிலரின் ஆணவம், அகங்காரம், ஆட்சி அதிகார திமிர், பணத்திமிர் காரணமாக அவர்கள் கோட்டைவிட்டார்கள்.

வருங்காலத்தில் எல்லோரும் திருந்துவார்கள் என எண்ணுகிறேன். ஒன்றிணைய வேண்டும் என்று சொல்வதை, கூட்டணிக்கான அழைப்பாகத்தான் பார்க்கிறேன். அமமுகவைப் பொருத்தவரை திமுகவை வீழ்த்த ஒன்றிணைய, அதாவது கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்" என்று கூறினார்.

முன்னதாக திமுக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அமமுக சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.

🎕🎕🎕🎕🎕


குட்டி காவலர்-மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்

சென்னை, அக்.13-

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக, தமிழ்நாடு அரசு மற்றும் கோயம்புத்தூர், உயிர் அறக்கட்டளை இணைந்து "குட்டி காவலர்" மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்தார். 

ஒவ்வொரு வீட்டிலும் "குட்டி காவலர் "




சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பரப்பும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5,000 மாணவர்கள் கோயம்புத்தூர், கொடிசியா வர்த்தக மையத்திலும், 4.50 லட்சம் மாணவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அந்தந்த பள்ளி வளாகத்திலும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். 

அதனைத் தொடர்ந்து, "குட்டி காவலர்" திட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான சாலைப் பாதுகாப்பு குறித்த மாணவர் பயிற்சி கையேட்டினையும், ஆசிரியர்களுக்கான வழிகாட்டி புத்தகத்தையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். 

சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அதிக அளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் பங்கேற்கும் இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்று அதற்கான சான்றிதழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கோயம்புத்தூர், கொடிசியா வளாகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக கலெக்டர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


🎕🎕🎕🎕🎕

2023-ம் ஆண்டுக்கான 

அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு

சென்னை, அக்.23-

தமிழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும்‘’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசின் விடுமுறை :

புத்தாண்டு தினம் - 01.01.2023

பொங்கல் -15.01.2023

திருவள்ளுவர் தினம்- 16.01.2023

உழவர் திருநாள் -17.01.2023

குடியரசு தினம்- 26.01.2023

தை பூசம் -05.02.2023

தெலுங்கு புத்தாண்டு -22.03.2023

வணிகக் கணக்குகளின் ஆண்டு நிறைவு -01.04.2023

மகாவீர் ஜெயந்தி -04.04.2023

புனித வெள்ளி -07.04.2023

தமிழ் புத்தாண்டு தினம் / டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்தநாள் -14.04.2023

ரம்ஜான் - 22.04.2023

மே தினம்- 01.05.2023

பக்ரீத் - 29.06.2023

முஹர்ரம் -29.07.2023

சுதந்திர தினம் - 15.08.2023

கிருஷ்ண ஜெயந்தி -06.09.2023

விநாயகர் சதுர்த்தி -17.09.2023

மிலாது நபி -28.09.2023

காந்தி ஜெயந்தி -02.10.2023

ஆயுத பூஜை -23.10.2023

விஜய தசமி -24.10.2023

தீபாவளி -12.11-2023

கிறிஸ்துமஸ் -25.12.2023

ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🎕🎕🎕🎕🎕

விளையாட்டு துறைக்கான வேலைவாய்ப்பில் ஆணழகன் துறையை இணைக்க வலியுறுத்தல்

மதுரை, அக்.13-

தமிழக அரசின் வேலைவாய்ப்பில் 3 சதவீத விளையாட்டுத்துறைக்கான இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசனிடம் மதுரை ஆணழகன் சங்க நிர்வாகிகள்   மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க தலைவர் சௌந்திரபாண்டியன், பொதுச்செயலாளர் கே.சிவக்குமார், பொருளாளர் பிரவீன் ஆண்ட்ரூஸ் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் 80 பேர், மதுரை எம்பி சு.வெங்கடேசனை   சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தமிழ்நாட்டில் ஆணழகன் துறையில் மாநில அளவிலான போட்டிகள், தேசிய அளவிலான மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஆணழகன்கள் மத்திய அரசின் ரயில்வே துறை, தபால் துறை, வருமான வரித்துறை, ராணுவ முப்படைகளின் துறையில் 100-க்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இதேபோல், தமிழக அரசின் வேலைவாய்ப்பில் விளையாட்டு துறைக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் ஆணழகன் துறையையும் இணைக்க வேண்டும். அதற்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு தாங்கள் கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

முன்னதாக எம்பி முன்னிலையில் ஆணழகன்கள் தங்களது உடற்பயிற்சி திறமைகளை காட்டும் வகையில் ஆணழகன் போட்டி நடத்திக் காட்டினர். இதில் சில நாட்களுக்கு முன்பு நடந்த போட்டியில் மதுரை ஆணழகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாரீஸ்வரன் மற்றும் ஆணழகன் பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்..

🎕🎕🎕🎕🎕


நெல்லின் ஈரப்பத அளவு 

தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை, அக்.13-

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி 2014 தேர்தல் பரப்புரையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாக்டர் எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவோம், விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காகக் கூட்டுவோம் என வாக்குறுதி கொடுத்தனர். கடந்த எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழடிக்கின்ற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்தது. அந்த மூன்று சட்டங்களிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எந்த குறிப்பும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படாது என்ற நிலையில் தலைநகர் தில்லி நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி ஓராண்டு காலம் வெயில், மழை, குளிர் என பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

வானொலியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே உரையாற்றுகிற பிரதமர் மோடி, தமது அலுவலகத்திலிருந்து மிக அருகாமையில் போராட்டம் நடத்திய விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த முன்வந்ததில்லை. இதன்மூலம் விவசாயிகளை உதாசீனப்படுத்துகின்ற போக்கு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது. இறுதியாக வடமாநில தேர்தலை மனதில் கொண்டு பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று விவசாயிகள் பிரச்சினையை ஆராய ஒரு குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு இதுவரை விவசாயிகளோடு கலந்து பேசவில்லை. விவசாயிகள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. எல்லாமே கண் துடைப்பு நாடகமாகவே நடந்து வருகிறது.

தற்போது விவசாயிகள் உற்பத்தி செய்கிற 23 விளைப் பொருட்களுக்கு மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்காமல் உள்ளது. விவசாயிகள் பயன்படுத்துகிற இடுபொருட்களான உரம், பூச்சி மருந்து, எரிபொருள், தொழிலாளர்களின் கூலி ஆகியவை பலமடங்கு கூடியிருக்கிறது. இந்நிலையில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற விளைப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய வேண்டிய மத்திய அரசின் விலை நிர்ணயக்குழு விவசாயிகளோடு கலந்து பேசவில்லை. இதனால் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்காத நிலை உள்ளது.

பாஜக கொடுத்த வாக்குறுதியின்படி எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரையின் பேரில் உற்பத்தி செலவோடு 50 சதவிகிதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்வோம் என்ற பரிந்துரையை நிறைவேற்ற பாஜக அரசு தயாராக இல்லை. விவசாய சந்தையை அதானி, அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்வது தான் பாஜக அரசின் நோக்கமாகும். அதனால் தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. விவசாயிகளுடைய கோரிக்கையான விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டு அந்த விலையில் தான் கொள்முதல் செய்ய வேண்டுமென்று சட்டப்படி கட்டாயமாக்க வேண்டும் என்பதை மோடி அரசு ஏற்கத் தயாராக இல்லை.

இந்த கோரிக்கை நிறைவேறினாலொழிய விவசாய சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்படும். இதன்மூலம் விவசாயிகளுக்கு விரோதமான அரசாக பாஜக செயல்படுவதோடு கார்ப்பரேட் ஆதரவு அரசாகத் தான் நடைமுறையில் செயல்பட்டு வருகிறது. இத்தகைய போக்கின் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாஜக அரசு சீர்குலைத்து வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது.

இந்தக் கோரிக்கையை ஏற்று விவசாயிகளிடமிருந்து நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்யலாம் என அனுமதித்து உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையில் உள்ள நியாயத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்பாராத மழைக் காலங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கிற நெல் தானியங்கள் ஈரப்பதம் அடைந்து விற்க முடியாத அவலநிலை உள்ளது. எனவே, தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

🎕🎕🎕🎕🎕

டெக்ஸ்வேலி சார்பில் 

மெகா தீபாவளி பஜார்

ஈரோடு, அக்.13-

ஈரோடு சித்தோடு அருகே பெங்களூரு  கொச்சின் தேசிய  நெடுஞ்சாலையில் 20 லட்சம் சதுர அடியில் மிகப்பிரம்மாண்டமாய் புதிய அவதாரமாய் அமைந்திருக்கும் டெக்ஸ்வேலியில் இந்த தீபாவளி பண்டிகை முன்னிட்டு மிகப்பெரிய கொண்டாட்டமாக நடத்த டெக்ஸ்வேலி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர் சந்திப்பு கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில்   டெக்ஸ்வேலி துணைத்தலைவர் சி. தேவராஜன் , நிர்வாக இயக்குனர் பி.ராஜசேகர் , செயல் இயக்குனர் டி.பி.குமார் மற்றும் தலைமை செயல் அதிகாரி சிலாஸ் பால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அப்போது அவர்கள் பேசுகையில், தீபாவளிக்கு டெக்ஸ்வேலி என்ற முழக்கத்தோடு நாங்கள் துவக்கியுள்ளோம். வருகிற தீபாவளி பண்டிகைக்கு இரட்டிப்பு ஆக்கும் வகையில் , டெக்ஸ்வேலி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் அக்டோபர் 24 ஆம் தேதி வரை பலப்பல கொண்டாட்ட நிகழ்வுகள் தினம்தினம் நடைபெற உள்ளது. அக்டோபர் 12 முதல் 16 வரை மெகா தீபாவளி பஜார் என்ற பிரம்மாண்டமான தீபாவளி விற்பனை கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இதில் 140 - க்கும் மேற்பட்ட அரங்குகள் நிறைந்த இந்த கண்காட்சியினை அக்டோபர் 12 ஆம் தேதி ஈரோடு மேயர்  நாகரத்தினம் துவக்கி வைத்தார். இந்த அரங்குகள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவர்வதாக அமையும் . வீட்டு உபயோகப்பொருட்கள் , எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் , கார்கள் , மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்பு , பர்னிச்சர்கள் ஆகியவற்றுடன் அழகுசாதன் பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள் , ஆயுர்வேத மருந்தகம் , கணினிப் பொருட்கள் , டாட்டூஸ் , அழகுநிலையங்கள் என்று இதுவரை இல்லாத அளவுக்கு பிரம்மாண்டமாக வித்தியாசமாக நடைபெற உள்ளது.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை மகிழ்விக்க மகிழ்விக்க 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரத்யேக வேடிக்கை விளையாட்டு மையம் (திuஸீ ஞீஷீஸீமீ), 25 க்கும் மேற்பட்ட உணவகங்களுடன் கூடிய உணவு திருவிழா , என அனைத்தும் வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி விழாவில் அக்டோபர் 14,15,16 ஆகிய நாட்களில் பிரபல சின்னத்திரை கலைஞர்கள் பங்குபெறும் ஸ்டார் ஷோ நிகழ்வுகளும் 20 - ம் தேதி சங்கமம் என்ற தமிழ் கலாசார திருவிழாவும் நடைபெற உள்ளன. இந்த தீபாவளிக்கு டெக்ஸ்வேலி விழாவில் ஸ்லோகன் போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெரும் வாடிக்கையாளர்களுக்கு பல பல பிரம்மாண்ட பரிசுகளும் உள்ளன. 

முதல் மெகா பரிசாக ஒரு கார் ஒருவருக்கும் , இரண்டாவது பரிசாக 3 நபர்களுக்கு இருசக்கர வாகனமும் , மூன்றாம் பரிசாக 50 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயமும் (தினமும் 5 நபர்களுக்கு என்ற முறையில்) வழங்கப்பட உள்ளது.

தென்னிந்தியா முழுவதும் டெக்ஸ்டைல் துறையை சார்ந்த வியாபாரிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர் . இதன் தொடர்ச்சியாக கோடை கால ஆடைச் சந்தையை முன்னிட்டு ஜிகிநி ணிஙீறிளி ணிஞிமிஜிமிளிழி -2 வருகிற 2023 ம் ஆண்டு ஜனவரி 29,30,31 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது எண்றனர்.


அதிமுக விஐபிக்கள் சொத்து வாங்க உதவி

பத்திரப்பதிவு சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு-முக்கிய ஆவணங்கள் சிக்கியது

சேலம், அக.13-

சேலத்தில் அதிமுக ஆட்சியின்போது விஐபிக்கள் சொத்து வாங்கினால் பத்திரப்பதிவு செய்து கொடுத்து சர்ச்சையில் சிக்கிய உதவியாளர் காவேரி வீட்டில் விஜிலென்ஸ் சோதனை நடைபெற்றது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின்பேரில் நடந்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் சூரமங்கலம் மேற்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில், உதவியாளராக காவேரி (58) என்பவர் பணியாற்றி வருகிறார். 

இவர் மீது வருமானத் திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து   காலை 8 மணிக்கு, சேலம் இரும்பாலை கணபதிபாளையத்தில் உள்ள காவேரி வீட்டிற்கு சென்று சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. 

இவர், கடந்த ஆட்சியில் முக்கிய விஐபிக்களுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவரது பெயரில் எவ்வளவு சொத்து உள்ளது; உறவினர்கள் பெயரில் சொத்து வாங்கி கொடுத்துள்ளாரா என லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அவரது வங்கி கணக்கு தொடர்பாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

கடந்த அதிமுக ஆட்சியில் சேலம் மண்டலத்தில் காவேரியை மீறி உதவியாளர் முதல் டிஐஜிக்கள் வரை யாரும் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு உள்ளே வர முடியாது என்ற நிலை இருந்தது. 

சேலத்து விஐபிக்களுக்கு மிகவும் நெருக்கமானவர் காவேரி. இதனால் அவர்கள் சொத்து வாங்கும்போது, அனைத்து வேலைகளையும் காவேரியே செய்து கொடுப்பார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக இருந்தாலும், சார்பதிவாளராக இருந்தாலும் பதிவு பணியை காவேரியிடமே வழங்கி வந்தனர். 

அதிமுக ஆட்சிகாலத்தில் விவிஐபியாக இருந்தவரின் வீட்டில் சர்வசாதாரணமாக இவரை பார்க்கலாம். 

எந்த பதிவு அலுவலகத்திலும் உதவியாளருக்கு தனிஅறை இல்லாத நிலையில், சூரமங்கலத்தில் அறை ஒன்றையும் வைத்திருந்தார் காவேரி.  விஐபிக்களுக்கு பதிவு செய்யும் போது தனி அறையில் தான் காவேரி அமர்ந்திருப்பார். 

பதிவு முழுமையாக முடிந்த பிறகே வீட்டிற்கு செல்வார். சேலம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்ட அதிமுக விஐபிக்கள் இங்கே சொத்து வாங்கும் போது, பணிகளை காவேரியிடமே ஒப்படைப்பது வழக்கமாக இருந்தது. இப்படி பெரும் சர்ச்சையில் காவேரி சிக்கிய நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

அப்போது லட்சக்கணக்கில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது, காவேரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் காவேரியின் உறவினர்கள் மூன்று பேர் வீட்டிலும் விஜிலென்ஸ் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்

No comments

Thank you for your comments