சட்டத்துக்கு புறம்பாக எப்போதும் நடக்காதீர்கள், பயிற்சிக்காவலர்களுக்கு ஏடிஜிபி அமல்ராஜ் அறிவுரை
காஞ்சிபுரம், அக்.19-
சட்டத்துக்கு புறம்பாக எப்போதும் நடக்காமல் இருந்தால் பணி வாழ்வும் சிறப்பாக அமையும் என பயிற்சியை நிறைவு செய்த காவலர்களுக்கு தாம்பரம் காவல்துறை ஆணையாளரும், ஏடிஜிபியுமான ஏ.அமல்ராஜ் காஞ்சிபுரத்தில் புதன்கிழமை பேசினார்.
காஞ்சிபுரம் காவலர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நிறைவு அணிவகுப்பு விழா அப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
விழாவில் பயிற்சிக் காவலர்களின் அணிவகுப்பை ஏடிஜிபி ஏ.அமல்ராஜ் காஞ்சிபுரம் எஸ்.பி.சுகாதருடன் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டார். பின்னர் பயிற்சிக்காவலர்கள் அணிவகுத்து வந்து அவருக்கு மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசியது..
தமிழக காவல்துறையில் 80 சதவிகிதம் பேர் காவலர்களாக இருக்கிறார்கள்.அப்பெரிய அணியில் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்.
உடல்நலம், குடும்ப சூழ்நிலை ஆகியனவற்றை மறந்தும் நீங்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறீர்கள். நீங்கள் அணியும் சீருடைக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வேண்டும். சீருடை அணிந்த பலரும் தேசத்துக்காக உயிரையும் நீத்திருக்கிறார்கள்.
தற்போது 7 மாத அடிப்படைப் பயிற்சி மட்டுமே நிறைவு பெற்றுள்ளது. இன்னும் காவல்துறையில் ஏராளமான பயிற்சிகள் உள்ளன.ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு நிகழ்வும் பயிற்சியாக அமையும்.
நீங்கள் எப்போதும் சட்டத்துக்கு புறம்பாக நடக்காதீர்கள்.சட்டம் சொல்லும் வழியில் சென்றால் உங்களின் பணிவாழ்வும் சிறப்பாக அமைந்து விடும்.உங்கள் பெற்றோருக்கும், காவல்துறைக்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
இதுவரை சாதாரண மனிதராக இருந்த நீங்கள் இப்போது காவலர்களாக மாறி மக்களைப் பாதுக்காக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள். தோல்விகள் ஒவ்வொன்றையும் பாடமாக்கிக் கொள்ள வேண்டும்,தவறுகளை திருத்திக் கொண்டு சமுதாயத்தில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடிக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் புதன்கிழமை ஒரே நாளில் 43 இடங்களில் அடிப்படைப் பயிற்சியை 10 ஆயிரம் காவலர்கள் நிறைவு செய்து பெருமை மிக்க காவல்துறையில் இணைந்திருக்கிறார்கள் என்றார்.
விழாவில் எஸ்பியும், பயிற்சிப்பள்ளி முதல்வருமான எம்.சுதாகர் வரவேற்றார்.துணை முதல்வர் சண்முகம் நன்றி கூறினார். இவ்விழாவில் துப்பாக்கி சுடும் பயிற்சி, சட்ட வகுப்பு ஆகியனவற்றில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதக்கங்களையும், பயிற்சி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகளையும் ஏடிஜிபி வழங்கினார்.
நிறைவாக பயிற்சி நிறைவுக் காவலர்களின் சிலம்பாட்டம்,தீப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் டிஎஸ்பி க்கள்,ஆய்வாளர்கள், பயிற்சிக் காவலர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







No comments
Thank you for your comments