இளஞ்சிவப்பு நிறத்தில் காஞ்சிபுரம் அரசு புற்றுநோய் மருத்துவமனை!
காஞ்சிபுரம், அக்.22-
மார்பகப்புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அக்டோபர் மாதம் கொண்டாடப்படுவதையொட்டி காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ள அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துமவனை வளாகம் முழுவதும் வெள்ளிக்கிழமையிலிருந்து இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.
காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் கடந்த 21.3.1969 ஆம் தேதி அரசு அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை தொடங்கப்பட்டது.
இங்கு தினசரி புறநோயாளிகளாக 350 பேரும்,உள்நோயாளிகளாக 300க்கும் மேற்பட்டோரும் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழகத்திலேயே அரசின் சார்பில் காஞ்சிபுரத்தில் மட்டுமே அரசு புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இங்கு புற்றுநோய் இருக்கிறதா என கண்டறியும் மேமோகிராம் கருவி, கணினி வழி எக்ஸ்ரே கருவி, சி.டி.ஸ்கேன் கருவி, மார்பகப் புற்று நோய் பரிசோதனைக் கருவி உட்பட அதிநவீன கருவிகள் உள்ளன.
இம்மருத்துவமனையில் உள்ள அலங்கார நுழைவு வளைவு மற்றும் மருத்துவமனை வளாகம் முழுவதும் வெள்ளிக்கிழமையிலிருந்து இளஞ்சிவப்பு நிறத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.இது குறித்து அம்மருத்துவமனையின் இயக்குநர் வி.சீனிவாசன் கூறியது..
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முழுவதும் இளஞ்சிவப்பு மாதமாகவும் அம்மாதத்தை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக அக்.21 ஆம் தேதி இளஞ்சிவப்புநாளாகவும் கருதப்படுவதால் அன்று முதல் புற்றுநோய் மருத்துவமனை வளாகம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்கள் அவசியம் அறிந்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்ற காரணத்திற்காக இளஞ்சிவப்பு நிறத்தில் மருத்துவமனை நுழைவுவாயில் மற்றும் வளாகம் முழுவதையும் மிளரச் செய்திருக்கிறோம் என்றார்.

No comments
Thank you for your comments