பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிப்பு...
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்தநாளன்று இலக்கியக் கூட்டம் நடத்துதல், அதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக உள்ளுர் அல்லது அம்மாவட்டங்களில் செயல்படும் இலக்கிய அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் இலக்கியக் கூட்டங்கள் நடத்திடவும் இலக்கியக் கூட்டத்தின் ஒருபகுதியாக தமிழறிஞர்கள் எழுத்தாளர்களைப் பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியருக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இவ்வறிவிப்பினைச் செயற்படுத்துமுகமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 27.10.2022 வியாழக்கிழமை காஞ்சிபுரம், அண்ணா அரங்கத்தில் பேரறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. விசுவநாதம், அவ்வை துரைசாமிபிள்ளை, திரு உடுமலை நாராயணகவி அவர்களின் நினைவை போற்றும் வகையில் இலக்கிய கூட்டம் நடைபெற உள்ளது.
மேலும், இலக்கியக் கூட்டம் நடத்தப்பெறுவதற்கு முன்னதாக பேரறிஞர் அண்ணா, கி.ஆ.பெ. விசுவநாதம், அவ்வை துரைசாமிபிள்ளை, திரு உடுமலை நாராயணகவி ஆகியோர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூறும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் 20.10.2022 அன்று முற்பகல் 9.30 மணிக்கு காஞ்சிபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் 27.10.2022 அன்று காஞ்சிபுரம் அண்ணா அரங்கத்தில் நடத்தப்பெற உள்ள இலக்கியக்கூட்ட நிகழ்வில் தமிழறிஞர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பெறவுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்க முடியும்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் முதற்கண் கீழ்நிலை அளவில் முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிக் கல்வி இணை இயக்குநரால் நடத்தப்பெற்று அதில் தெரிவு செய்யப்பெற்ற மாணாக்கர்கள் மட்டுமே (பள்ளி மாணாக்கர்கள் 25 பேர், கல்லூரி மாணாக்கர்கள் 25 பேர்) மாவட்ட அளவில் நடைபெறவுள்ள இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்கலாம்.
மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க, பரிந்துரைக்கப்படும் மாணாக்கர்கள் போட்டி நாளன்று உரிய பரிந்துரைப் படிவத்தை காஞ்சிபுரம் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் நேரில் அளித்து போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாணவர்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியர்கள் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், அந்தந்த கல்லூரி முதல்வர்கள் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவே (தொலைபேசி எண் 044-27233969) தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments