வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வரதராஜபுரம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகளை 11.10.2022ம் தேதி அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஸ்ரீபெரும்புதூர், வரதராஜபுரம் பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வருடந்தோறும் வடகிழக்கு பருவ மழையின் போது பெய்யும் கனமழையால் அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட ஆதனூர், வரதராஜபுரம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்து வருவதால் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீர் சூழாமல் இருக்க அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது.
இது தவிர அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீர் வருவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் பகுதியில் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து நீர் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ12 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை, அடையாறு ஆற்றின் கிளையாற்றில் சோமங்கலம் பகுதியில் ரூ4.50 கோடியில் கதவணை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடையாற்று ஆறு மற்றும் வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட அஷ்டலஷ்மி நகர், ராயப்பா நகர், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வரதராஜபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அடையாறு ஆற்றில் செல்லும் மழைநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் இருந்த 95 சதவிகித முன்னேற்பாட்டு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாம் இயற்கையோடு போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் எனவே குடியிருப்பு பகுதியில் வெள்ளநீர் புகாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதையடுத்து வரதராஜபுரம் அஷ்லட்சுமி நகர், ஆதனூர் ரூபி குடியிருப்பு மற்றும் அடையாறு ஆற்றில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கோ.சிவருத்ரய்யா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பி.ஸ்ரீதேவி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சைலேந்திரன், குன்றத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.சரஸ்வதி மனோகரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் திரு.குஜராஜ் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்
No comments
Thank you for your comments