Breaking News

மின்சார வாகன டீலர்ஷிப் தருவதாக ரூ.17 லட்சம் மோசடி- தம்பதி கைது

பூந்தமல்லி: 

தூத்துக்குடி கார்டுவெல் காலனி பகுதியை சேர்ந்தவர் நிமேஷ் எட்வின் (43). இவர் கடந்த வாரம் பூந்தமல்லி போலீசில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் பூந்தமல்லி முனிகிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பாண்டி லட்சுமி தம்பதியினர் கரையான்சாவடி பகுதியில் இரு சக்கர வாகன விற்பனை நிறுவனம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிறுவனத்தின் மின்சார பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்துக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு டீலர்ஷிப் உரிமை கொடுப்பதாக கூறினர். அதற்காக ரூ.25 லட்சம் பணம் கொடுத்துள்ளேன். 

ஆனால் அவர்கள் கூறியபடி டீலர்ஷிப் உரிமையை கொடுக்கவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தில் ரூ.8 லட்சம் மட்டுமே திருப்பி கொடுத்தனர். மீதியுள்ள ரூ.17 லட்சத்தை திருப்பி கேட்டபோது பணத்தை தராமல் இழுத்தடித்து வந்தனர். 

இதையடுத்து நேரில் சென்று பணத்தை கேட்டபோது வெங்கடேசும் அவரது மனைவி பாண்டி லட்சுமியும் சேர்ந்து தகாத வார்த்தை கூறி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் நிமேஷ் எட்வின் தெரிவித்திருந்தார். 


இதுகுறித்து பூந்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி பாண்டிலட்சுமி இருவரையும் கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


 

No comments

Thank you for your comments