Breaking News

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுகள் விற்பனை உரிமம் விண்ணப்பிக்க அறிவிப்பு...

தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளன.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், எதிர்வரும் தீபாவளி பண்டிகையையொட்டி வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகமாக பட்டாசுகள் வாங்கி விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள் தற்காலிக உரிமம் பெற கீழ்வரும் ஆவணங்களுடன் 01.09.2022 முதல் 30.09.2022 வரை இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  

அவ்வாறு விண்ணப்பிக்கும்போது கீழ்கண்ட ஆவணங்களை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும்.

1.  கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டடத்திற்கான புளு பிரிண்ட் வரைபடம் (6 நகல்)


2. கடை உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த இடமாக இருப்பின் அதற்கான ஆதாரம் (அ) வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்தப்பத்திரம் மற்றும் உரிமத்தினை காட்டும் ஆவணம்.

3.  உரிமத்திற்கான கட்டணம் ரூ.500/- ஐ அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான்.

4.   இருப்பிடத்திற்கான ஆதாரம் (ஆதார் அட்டை / வாக்காளர் அடையாள அட்டை  குடும்ப அட்டை)

5.   வரி ரசீது

6.  புகைப்படம் 2 (பாஸ்போர்ட் சைஸ்)

மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு உரிமம் வேண்டுவோர் 30.09.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.  தங்களின் ஆன்லைன் விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணை முடிவுபெற்றவுடன், ஆன்லைன் மூலமாகவே தங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்ற விவரத்துடனும், தற்காலிக உரிமத்தின் ஆணையினை தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்தின் முன்பாகவே இ-சேவை மையம் மூலமாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 



மேற்கண்ட தேதிக்கு பின் ஆன்லைனில் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் நிரந்தர பட்டாசு விற்பனை உரிமம் கோருவோரும் இணைய வழியிலேயே விண்ணப்பிக்கவேண்டும். இதற்கு கால வரையறை கிடையாது மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால் சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments