Breaking News

வேலூர் நிதி நிறுவன ஏஜெண்டு தற்கொலை

வேலூர்: 

வேலூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் வட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கிளைகளை தொடங்கியது. மேலும் டெல்லியிலும் இந்த நிதி நிறுவனத்திற்கு கிளை உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம் காட்பாடியில் இயங்கி வருகிறது. 



பங்குசந்தையில் முதலீடு செய்வதாக கூறி பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்துள்ளனர். ரூ.1 லட்சம் பணம் கட்டினால் மாதம் தோறும் ரூ.8000 வட்டி தருவதாக கூறி பண வசூல் செய்துள்ளனர். 

இந்த நிதி நிறுவனத்தில் முக்கிய வி.ஐ.பி.கள், அரசியல் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், போலீசார் என பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்துள்ளனர். ஏஜெண்டுகள் மூலம் இந்த நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்துள்ளனர் மேலும் அந்த ஏஜெண்ட் மூலமே வாடிக்கையாளர்களுக்கு பணம் வட்டியாகவும் தரப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் காட்பாடி விஜி ராவ்நகரில் உள்ள நிதி நிறுவன அதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதேபோல வேலூர் சத்துவாச்சாரி அரக்கோணம் ஆற்காடு காஞ்சிபுரம் திருவண்ணாமலை உள்பட 21 இடங்களில் நிதி நிறுவன கிளை மற்றும் அதனோடு தொடர்புடையவர்கள் வீடுகளில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

இதனைத் தொடர்ந்து தனியார் நிறுவன அலுவலகங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பணம் கட்டியவர்கள் தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டு வருகின்றனர். காட்பாடி அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவரது மகன் வினோத்குமார் (வயது 28). இவர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தனியார் நிதிநிறுவன தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். மேலும் இவர் நிறுவனத்திற்கு ஏஜெண்டாகவும் செயல்பட்டுள்ளார். அவர் மூலம் சிலர் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியுள்ளனர். 

தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையை தொடர்ந்து பணம் கட்டியவர்கள் வினோத்குமாரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வினோத்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

காட்பாடி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிதி நிறுவன அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் அதன் ஏஜெண்டு ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பணம் கட்டியவர்கள் மேலும் கலக்கமடைந்துள்ளனர்.


 

No comments

Thank you for your comments