வேலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய கட்டிடங்கள் திறப்பு
சென்னை:
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி திட்டப்பகுதி 1-ல் 7 கோடியே 37 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோட்ட அலுவலகக் கட்டிடம் உட்பட மொத்தம் 26 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உயரமான கட்டிடங்கள், வணிக மற்றும் அலுவலகக் கட்டிடங்கள், மறு கட்டுமானத் திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி திட்டப்பகுதி 1-ல் 7 கோடியே 37 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கோட்ட அலுவலகக் கட்டிடம்,
திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டம், சாத்தனூர் கிராமம், கே.கே நகரில், 1.39 ஏக்கர் பரப்பளவில் 11 கோடியே 55 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி வீட்டு வசதி பிரிவு அலுவலக வளாகம்,
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டம், தோப்பூர் கிராமத்தில் தோப்பூர் தன்னிறைவு திட்டப்பகுதியில் 4 கோடியே 50 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உச்சப்பட்டி தோப்பூர் துணைக்கோள் நகரக்கோட்ட அலுவலகக் கட்டிடம்;
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், உச்சப்பட்டி கிராமத்தில் உச்சப்பட்டி பகுதி-7 திட்டப்பகுதியில், 2 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மாளிகை
என மொத்தம் 26 கோடியே 31 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி எஸ். முருகன் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள செஞ்சி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 1 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் அலுவலகக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலகக் கட்டுப்பாட்டில் உள்ள சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு 3 கோடியே 72 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய அலுவலகக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இவ்வலுவலகங்கள், பொதுமக்கள் காத்திருப்பு அறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அறை, பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்கும் அறை, கணினி அறை, கூட்டரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இந்த அலுவலகங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையர் நிர்மல்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments