மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.54,78,530/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் ரூ.54,78,530/- மதிப்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (29.08.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 208 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம், நெமிலி கிராமத்தை சார்ந்த நரிக்குறவர் இன 38 குடும்பங்களுக்கு ரூ. 54,29,820/- மதிப்பில் இலவச பட்டாக்களையும், பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.48,710/- மதிப்பில் தேய்ப்பு பெட்டிகளையும், வாலாஜாபாத் வட்டத்தை சார்ந்த 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.இரவிச்சந்திரன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.சுமதி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் திரு.கு.பிரகாஷ் வேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments