Breaking News

எடப்பாடியில் தனியார் மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் தலைமையில் திடீர் ஆய்வு

எடப்பாடியில் தனியார் மருத்துவமனையில் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் தலைமையில் திடீர் ஆய்வு... இதில் மருத்துவமனையில் இருந்து ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளனர்.



எடப்பாடியில் கடந்த பத்தாண்டுகளாக தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண் பெண் கடந்த மே மாதம் 30 ஆம் தேதி குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.



மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தொடர்ந்து ஒரு வார காலத்துக்குள் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்ததால் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 



இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு பொருட்களை சேதப்படுத்தினர்.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று சுகாதாரத்துறை இணை இயக்குனர் நெடுமாறன், குடும்ப நல இணை இயக்குனர் வளர்மதி, எடப்பாடி வட்டார தலைமை மருத்துவர் செந்தில்குமார் மற்றும் வட்டாட்சியர் லெனின் தனியார் அரவிந்த் மருத்துவமனையில் திடீர் ஆய்வை மேற்கொண்டார்.



தொடர்ந்து மூன்று மணி நேரமாக நடைபெற்ற ஆய்வில் உயிரிழந்த சங்கீதாவின் அறுவை சிகிச்சை குறித்த மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்ட பொழுது அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என மறுத்து விட்டனர்.

அதன் பிறகு தொடர்ந்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்தபோது மருத்துவமனையில் இயங்கி வரும் மருந்தகத்தில் சங்கீதா சிகிச்சை குறித்த ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை மறைத்து வைத்ததை கண்டுபிடித்து கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.    

இதனைத் தொடர்ந்து நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அறைகள் பரிசோதனை அறைகள் அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பதனையும் சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த சங்கீதாவின் உயிரிழப்பு குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் முறையாக விசாரித்து மருத்துவமனை  நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments