காஞ்சிபுரம் மாநகராட்சியில் மஞ்சள் நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் துவக்கம்
காஞ்சிபுரம் ஜூலை 22-
வேகவதி ஆற்றில் இருந்து பிரிந்து காஞ்சிபுரம் வழியாக ஓடும் மழைநீர் கால்வாய் மஞ்சள் நீர்க் கால்வாய். இந்த கால்வாய் தாமல், புத்தேரி, சாலபோகம் கிராமப்பகுதிகள் வழியாக வந்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் கைலாசநாதர் கோயில் பகுதி, கிருஷ்ணன் தெரு,காமராஜர் வீதி, ரயில்வே சாலை மற்றும் திருக்காலிமேடு பகுதி வழியாகச் சென்று நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது.
இந்தக் கால்வாய் 20 அடி ஆழமும், 30 அடி அகலமும் கொண்டது. சுமார் 20 கி.மீ. நீளம் கொண்டது.காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுமார் 5கிமீ ஓடும் இந்தக் கால்வாயில் சாயப்பட்டறை கழிவுகள், அரிசி ஆலைக் கழிவுகள், பொதுமக்கள் சிலரின் வீட்டில் இருந்து செல்லும் குப்பைகள் , கழிவுகள் விடப்படுகின்றன.
இதனால் பொதுமக்கள் சுகாதாரம் சார்ந்து பெரிதும் பாதிக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் வந்த சட்டப்பேரவை மதீப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையிலான குழுவினர் ஆய்வுக்கு பின் மஞ்சள் நீர் கால்வாய் புனரமைக்கபடும் என தெரிவித்தார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் பாவாஜி தெரு அருகே காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் மஞ்சள் நீர் கால்வாய் தூர் வாரும் பணி காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.இதில் நகராட்சி கமிஷனர் கண்ணன் உதவி பொறியாளர் பன்னீர்செல்வம் மாமன்ற உறுப்பினர் கௌதமி திருமாதாசன் திமுக பிரமுகர் யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மேலும் தூர் வாரும் கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
இச்செயல் மகிழ்ச்சி அளித்தாலும் , பொதுமக்கள் குப்பைகள் , கட்டட கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்பதும் ,அத்துமீறி கழிவுநீரை விடும் நபர்களை கண்டறிந்து அதனை எச்சரிக்கை செய்து தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments
Thank you for your comments