Breaking News

சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரிப்பு

சேலம்:

அன்றாட சமையலில் தவிர்க்க முடியாத உணவுப் பொருளாக தேங்காய் இடம் பிடித்துள்ளது. தின்பண்டங்கள், பலகாரங்கள், எண்ணை தயாரிப்பிலும் தேங்காய் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. 

சேலம் மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சி, கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, கோவை, பெருந்துறை, ஈரோடு, காங்கேயம், தாராபுரம், அவல் பூந்துறை, அரச்சலூர், உடுமலைப்பேட்டை, திருப்பூர் மற்றும் கர்நாடகா மாநிலம் மைசூரு, மாண்டியா, சாம்ராஜ் நகர், கொள்ளேகால், ஆனூர், ஏலந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தேங்காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. 

தற்போது அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வரத்து அதிகரிப்பால் விலை அவ்வப்போது குறைந்து விற்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 1 டன் தேங்காய் ரூ.24,000 வரை விற்கப்பட்டது. 

இந்த மாதம் ரூ.2000 விலை குறைந்து 1 டன் தேங்காய் ரூ.22,000 வரை விற்கப்பட்டு வருகிறது. வரும் மாதங்களில் மேலும் விலை குறைந்து 1 டன் தேங்காய் ரூ.20,000 வரை விற்கப்பட வாய்ப்புள்ளது. தற்போது ஆடி மாதம் திருவிழா மாதம், மற்றும் தொடர்ந்து வருகிற ஆவணி மாதத்தில் அடுத்தடுத்து தொடர் முகூர்த்த தினங்கள் திருமண நிகழ்ச்சிகள், மற்றும் விசேஷ தினங்கள் வருவதால் தேவைகள் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. 

கடைவீதி, ஆற்றோரம் தெரு, ஆனந்தா மார்க்கெட், பால் மார்க்கெட் பகுதிகளில் சிறிய அளவு தேங்காய் ரூ.8 முதல் ரூ.10 வரையும், நடுத்தர அளவு தேங்காய் ரூ‌.12 முதல் ரூ.15 வரையும், பெரிய அளவு தேங்காய் ரூ.18 முதல் ரூ.20 வரையும் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments