Breaking News

பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை ஆரம்பகட்ட விசாரணை நிறைவு.. சிபிசிஐடி இனி விசாரிக்கும் - டிஐஜி சத்யபிரியா


திருவள்ளூர் :

திருவள்ளூர் அருகே கீழச்சேரியில் செயல்படும் அரசு உதவிப்பெறும் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் உணவு அருந்திய பின்னர், தற்கொலை செய்துக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும் என்று மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் கல்யாண் தெரிவித்துள்ளார்.

திருத்தணி தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பூசனம் என்பவரது மகள் சரளா, இவர் திருவள்ளுவர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே விடுதியின் அறையில் உடன் இருக்கும் சக நண்பர்கள் உணவு அருந்த சென்ற நிலையில், அறையில் மாணவி சரளா தனியாக இருந்துள்ளார். அப்போது மாணவி சரளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திர தாசன், காவல் உதவி ஆய்வாளர் இளங்கோ மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் மாணவி தற்கொலை குறித்து மாவட்ட எஸ்.பி, திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 



மேலும் பள்ளி மற்றும் மாணவியின் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மாணவி காலையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த தகவலை பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு மிகவும் தாமதமாக தெரிவித்ததாகவும் அது கூட இறந்தார் என கூறாமல் உடல்நிலை சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று மட்டுமே கூறியதாக பெற்றோரும் உறவினர்களும் புகார் தெரிவித்தனர்

மேலும், மாணவியின் இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக தகவல் அளிக்கவில்லை என கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கீழச்சேரி தனியார் பள்ளி விடுதியில் 12 வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. 


மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில் பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. 

அசாம்பவிதச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பள்ளி வளாகத்தின் முன்பு காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் மாவட்ட எஸ் பி கல்யாண், சிபிசிஐடி எஸ்பி செல்வகுமார் உள்ளிட்டோர் அந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் கல்யாண் கூறும் போது, 

“இந்தப் பள்ளியில் ஒரு விடுதி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு தகவல் வந்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, பள்ளிகளில் ஏதாவது மாணவி தற்கொலை செய்து கொண்டதால், அந்த தற்கொலை வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

அதன்படி, காவல் துறை புகாரை வாங்குவதற்காக காத்திருக்கிறோம். புகார் கிடைத்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன், வழக்கு உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றப்படும். சிபிசிஐடி போலீஸார், உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி விசாரணை நடத்துவர்.

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.

இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் போலீஸார் எதுவும் செய்ய முடியாது. சிபிசிஐடி விசாரணை மேற்கொள்வர். மாணவியின் பெற்றோர் தரப்பில் இதுவரை புகார் அளிக்கவில்லை” என்று அவர் கூறினார்.

காவல் துறை டிஐஜி சத்யபிரியா இன்று செய்தியாளர்களிடம் கூறியது: 

“திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று காலை தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக ஒரு புகார் வந்தது. தூக்கிட்டு தற்கொலை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக இன்று காலை உடனடியாக வந்த உள்ளூர் போலீசார், காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர், அதன்படியே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். சிபிசிஐடி இனி இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிவிடுவர். சம்பந்தப்பட்டவர்களிடம் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இன்றேகூட மாணவியின் உடற்கூறாய்வு செய்யப்படும்.

மாணவியின் பெற்றோர் உள்ளிட்டோர் அனைவரும் இங்குதான் உள்ளனர். அவர்களிடம் அனைத்தையும் எடுத்து கூறியுள்ளோம். இதில் வேறு எந்தக் குழப்பமும் கிடையாது.

காவல் துறையின் வேண்டுகோள் என்னவென்றால், தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். ஒரு சிலர் வேறு வேறு விதமாக இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர். தேவையற்ற இடங்களில், மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். எனவே, ஊடகங்கள் சரியான செய்திகளை தெரியப்படுத்துங்கள்” என்று அவர் கூறினார்.

விசாரணை அதிகாரி நியமனம் 

திருவள்ளூரில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கின் விசாரணை அதிகாரியாக, திருவள்ளூர் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் முன்பாகவே திருவள்ளூரில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments