தமிழகத்தை 2 மாநிலங்களாக பிரித்தால் நல்லது-நயினார்
நெல்லை, ஜூலை 5-
திமுக எம்பி ஆர். ராசா மட்டும்தான் தனி நாடு கேட்பாரா? நாங்களும் கேட்போம், தமிழகத்தை எங்களுக்கு இரண்டாக பிரித்துக் கொடுங்கள். ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரித்தது போல் தமிழகத்தையும் 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பா.ஜனதா சார்பில் போராட்டம் நேற்று நடைபெற்றது. நெல்லையில், ஜோதிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்கினார்.
மாநில இளைஞரணி துணைத்தலைவர் நயினார் பாலாஜி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்து பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டார்.
இதில் மாவட்ட செயலாளர் வக்கீல் வெங்கடாஜலபதி என்ற குட்டி, மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாபு தாஸ், துணைத்தலைவர் மார்க்கெட் கணேசன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் குணசேகர் அரியமுத்து, மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:- இந்த ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கமாக பா.ஜனதா கூட்டத்தின்போது போலீசாரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது எங்கள் தொண்டர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் போலீசாருக்கு நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்.
தற்போது தமிழகத்தில் காவல்துறைக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. நெல்லை மாவட்டத்தில் கஞ்சா, மதுபோதைக்கு இளைஞர்கள் அடிமையாகி விடுகின்றனர். பள்ளி மாணவர்கள் நிறைய பேர் பாட்டில் உடன் பையை சுமந்து செல்லும் நிலை உள்ளது.
விரைவில் ஆணும் பெண்ணும் அடிமையாகும் நிலை தமிழகத்தில் உருவாகி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. திமுக எம்பி ஆர்.ராசா மட்டும்தான் தனி நாடு கேட்பாரா? நாங்களும் கேட்போம், தமிழகத்தை எங்களுக்கு இரண்டாக பிரித்துக் கொடுங்கள். பாண்டியநாடு, பல்லவ நாடு என்று இரண்டாக பிரித்துக் கொடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- தமிழகத்தை இரண்டு மாநிலங்களாக பிரித்தால் நல்லது என்பது எனது ஆசை. நிர்வாக காரணங்களுக்காக இரண்டாக பிரிக்கலாம். அதன் மூலம் அதிக அளவு நிதியை பெற முடியும்.
மாநிலங்களும் வளர்ச்சியை நோக்கி செல்லும். ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரித்தது போல் தமிழகத்தையும் 2 மாநிலங்களாக பிரிக்க வேண்டும். அதில் பா.ஜனதா முதலமைச்சராக இருந்தாலும் சரி, கூட்டணி கட்சியான அதிமுக முதலமைச்சர் பதவியில் அமர்ந்தாலும் சரி. தற்போது அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினையில் நாங்கள் நடுநிலையாக உள்ளோம்.
மோடியின் 8 ஆண்டு ஆட்சியில் ஊழலை பார்க்க முடியாது. ஜி.எஸ்.டி. தொடர்பாக தமிழகத்திற்கு ஒரு பைசா கூட மத்திய அரசு செலுத்த வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments