Breaking News

கட்சி அதிகாரத்தை கைப்பற்ற போவது யார்? அதிமுக இரண்டாக பிளவுபடும் அபாயம்..!

வேலூர், ஜூன் 15-

இரட்டை தலைமையால் அதிமுகவில் உட்கட்சி நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒற்றை தலைமை என்கிற முழக்கும் அதிமுகவில் மீண்டும் எழுந்துள்ளது. இதனால் கட்சி அதிகாரத்தை கைப்பற்ற போவது யார்...? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் ஒற்றை தலைமை கோஷம் மூலம் அ.தி.மு.க., இரண்டாக பிளவுபடும் அபாயமும் உருவாகி உள்ளது.  


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவின் நிலை கேள்வி குறியாக மாறியது. இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இடங்கள் உருவாக்கப்பட்டு கட்சிக்கு ஓபிஎஸ்ம் ஆட்சிக்கு இபிஎஸ் பிரித்துக்கொண்டனர். தற்போது ஆட்சி அதிகாரத்தை இழந்த அதிமுக நாடாளுமன்ற தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

இந்தநிலையில் இரட்டை தலைமையால் அதிமுகவில் உட்கட்சி நடவடிக்கை எடுப்பதில் கால தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டது. இதனால் ஒற்றை தலைமை என்கிற முழக்கும் அதிமுகவில் மீண்டும் எழுந்துள்ளது. ஜூன் 23ம் தேதி அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. 


அந்த கூட்டத்திற்கு முன்னோட்டமாக மாவட்டச்  செயலாளர்கள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.  சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசப்பட்டாலும், பிரதானமாக ஒற்றைத் தலைமையை வலியுறுத்தியே அனைவரும் பேசியுள்ளனர். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் வாக்கெடுப்பு மூலமாக  தலைமையை தேர்ந்தெடுக்க விரும்பினால் அதையும் ஏற்க தயார் என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜானகி அம்மாள், ஜெயலலிதாவிற்கு அதிமுக தலைமையை விட்டுக்கொடுத்ததுபோல, ஒற்றை தலைமையை, எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ. பன்னீர்செல்வம் விட்டுத்தர வேண்டும் என நேரடியாகவே பேசியுள்ளார். அதற்கு முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா உள்ளிட்ட ஒரு சிலர் ஆதரவு குரல் கொடுத்துள்ளார். 

அப்போது குறுக்கிட்ட மனோஜ் பாண்டியன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

பின்னர் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, எல்லா கட்சியிலும் ஒற்றைத் தலைமை மட்டும் தான் உள்ளது. இரட்டை தலைமை என்பது கிடையாது, முடிவுகள் எடுப்பதில் காலதாமதம் ஆவதால் ஒற்றை தலைமை ஒன்றே அதிமுகவை பலப்படுத்தும் என்றும் அதற்கான நேரம் தற்போது வந்துவிட்டதாகவும் தெரிவித்ததோடு, வருகின்ற 23ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமை என்ற கொள்கை முடிவு எடுப்பதோடு, யார் ஒற்றைத்தலைமை என்று இறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் ஒற்றைத்தலைமை முடிவை உடனடியாக ஊடகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளார். இதே கருத்தை முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தியும் வலியுறுத்தியுள்ளார். 

ஆனால்  அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைகைச் செல்வன், வேளச்சேரி அசோக் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு,  இரட்டை தலைமையே இருக்கலாம் என்றும் பேசியுள்ளனர். 

இதனை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுக்குழு முன்பாக நடந்துள்ள இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆரோக்கியமாக விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கட்சி வளர்ச்சிக்கு ஒற்றைத்  தலைமை தேவை என்று கூறியுள்ளனர். மேலும் ஒற்றை தலைமையின் அவசியம் குறித்தும் மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் அவர்களது முழு கருத்துக்களையும் ஜனநாயக முறைப்படி தெரிவித்தனர் என கூறினார்.  யார் தலைமை என்பது வரும் நாட்களில் கட்சித் தலைமை முடிவு செய்யப்படும் என தெரிவித்தவர், காலத்தின் கட்டாயத்தால் ஒற்றை தலைமை குறித்து விவாதம் நடைபெற்றதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை என்ற விவாதம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. அ.தி.மு.க.,வில் ஒற்றை தலைமை கோஷம் எழும்பியதுமே ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது இல்லங்களில் ஆதரவாளர்களுடன் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். கட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இந்தியாவில் உள்ள தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என அனைத்து கட்சிகளும் ஒற்றை தலைமையுடனேயே செயல்படுகின்றன. அ.தி.மு.க.,வில் மட்டுமே இரட்டை தலைமை உள்ளது. இரட்டை தலைமையால் முடிவுகளை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கட்சிகளின் நலன் சார்ந்த விஷயங்களிலும், வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விஷயங்களில் முடிவுகள் எடுப்பதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. 

எனவே அ.தி.மு.க.,வுக்கு ஒற்றை தலைமை மட்டுமே இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோர் ஒற்றை தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தியே பேசி வருகிறார்கள். ஆனால் அதே நேரத்துல ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். 

எடப்பாடி பழனிசாமி நேற்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2வது நாளாக எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன் , நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் பங்கேற்றனர். 

அதேபோல் ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்கள் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், வேளச்சேரி அசோக் மற்றும் 2 மாவட்ட செயலாளர்கள் என அவரது ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பல்வேறு கருத்துக்களும் வலியுறுத்தப்பட்டன. 

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை தேவை என பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து,  சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரைச் சந்திக்க அதிமுகவின் அமைப்புச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மனோஜ் கே பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் மற்றும் ஆர். பி   உதயகுமார் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அறியப்படும் ஜே சி டி பிரபாகர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரும் ஓ.பன்னீர்செல்வத்தை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  எடப்பாடி பழனிசாமியிடம் விவாதித்த விஷயங்கள் தொடர்பாகவும் அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்திடம் கூறி ஆலோசனை செய்தனர். 

 ஆலோசனை முடித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சி தலைமையின் கருத்து தான் எங்கள் கருத்து என்று கூறி விட்டு புறப்பட்டு சென்றார். அவரை தொடர்ந்து ஆலோசனை முடித்து விட்டு வெளியே வந்த வைத்தியலிங்கம்,  கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் கருத்து. ஒற்றை தலைமை தொடர்பாக ஏதும் விவாதிக்கவில்லை. நாங்கள் வேறு காரணங்களுக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சை சந்திக்க வந்தோம் என்று கூறினார். 

ஒற்றை தலைமை தொடர்பாக ஜெயக்குமார் பேசியது குறித்த கேள்விக்கு, ஆலோசனை கூட்டத்தில் தொண்டர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.  சிலர் ஓபிஎஸ்க்கும், சிலர் இபிஎஸ்க்கும்  ஆதரவாக பேசினர். ஆனால் இது தொடர்பாக இன்னும் உறுதியாக முடிவு எடுக்கப்படவில்லை.  கட்சி பலமாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்கள் கருத்து என்று வைத்தியலிங்கம் கூறினார்.‌ அத்துடன் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதே அதிமுகவின் குறிக்கோள். ஒற்றை தலைமையில் ஓபிஎஸா, இபிஎஸா என்பது தொண்டர்களின் விருப்பம் தான் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் அதிமுகவின் தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என திடீர் போஸ்டர்கள் முளைத்தன. இதனால் அதிமுகவில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத குறையாக தொடர்ந்து அதிமுக எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் என இரு அணிகளாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுகவின் தலைமைப் பொறுப்பை பெறப்போவது யார் என்ற பலத்த விவாதம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கட்சியிலும் சரி நிர்வாகிகளும் சரி எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது .அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது தலைமைப் பதவியை விட்டுத் தர மாட்டார் எனவும் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதாக அதிமுகவில் இருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் வருகிற 23ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க., செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை என்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றை தலைமை கோஷம் மூலம் அ.தி.மு.க., மீண்டும் இரண்டாக பிளவுபடும் அபாயமும் உருவாகி உள்ளது.


 


No comments

Thank you for your comments