தொண்டு நிறுவனங்கள் விரும்பினால் அரசு பள்ளிகளில் வெள்ளை அடிக்கவும்! - ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்
வேலூர், ஜூன் 14-
வேலூர் மாவட்டம் தொரப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளி மற்றும் அணைக்கட்டு வட்டம் அரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை நேற்று (13.06.2022) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழக அரசு மாணவர்களுக்கு இலவசமாக கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு பயிற்சியை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என ஆசிரியர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
தற்போது மெத்த படித்த ஆசிரியர்களும் கூட தாங்கள் எழுதும்போது எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது. எனவே மாணவர்களுக்கு எழுதுதல் மற்றும் படிக்கும் பழக்கங்களை உருவாக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் மொத்தம் 2,94,069 புத்தகங்களை மாணவ-மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அனைத்து பள்ளிகளையும் தூய்மைப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
பொதுப்பணித்துறை பொருத்த வரையில் நிர்வாக காரணங்களுக்கு பள்ளி நிர்வாக குழு சார்பில் அனுமதி பெற்று பணிகளை செய்யலாம் என அனுமதியளித்துள்ளது.
இதனால் பள்ளியை சீரமைப்பு செய்ய பள்ளி நிர்வாக குழு நடவடிக்கை எடுக்கும். தன்னார்வலர் தொண்டு நிறுவனங்கள் விரும்பினால் அரசு பள்ளிகளில் வெள்ளை அடிக்கவும் தூய்மை பணிகளை மேற்கொள்ள முன் வரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த குமார் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி, கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments