வேலூர் மாநகராட்சி அனுமதியின்றி பல கோடி விளம்பர போர்டுகள்! மாவட்ட அதிகாரிகள் ஆசியுடன் "விளம்பர" நிறுவனம் மெகா கொள்ளை?
வேலூர் :
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி, வேலூர் மாநகராட்சியில் தெருவுக்கு தெரு, விளம்பர பலகைகள் அதிகரித்துள்ளன. மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், கைகட்டி வேடிக்கை பார்ப்பதால், விபத்துக்களும், உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றன.
வேலூர் மாநகராட்சியின் பிரதான சாலைகள் அனைத்திலும், பெரிய கட் அவுட்கள், மின் விளக்கு அலங்காரத்துடன் அணிவகுக்கின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வைக்கப்பட்ட இந்த விளம்பர பேனர்களால், வாகன ஓட்டிகளின் கவனம் திசை திரும்பி, ஏராளமான விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் தொடர்ந்து ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
வேலூர் மாவட்டத்தில் சாலையில் வைக்கப்படும் எந்த நிறுவனத்துக்கும் பேனர் வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. ஆனால் வேலூரில் கடந்த 25 ஆண்டுகளாக அதிகாரிகளை கையில் போட்டு கொண்டு விளம்பர போர்டு வைப்பதில் "Ad" நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவு, அரசு உத்தரவு என எதையும் மதிக்காமல் இந்த நிறுவனம் பஸ் ஸ்டாண்டு, வேலூர் முக்கிய சாலைகளான ஆற்காடு சாலை, ஆரணி சாலை, அண்ணாசாலை, பெங்களூர் சாலை, காட்பாடி சித்தூர் சாலை, நீர் நிலைகள் என 200க்கும் மேற்பட்ட இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர்.
இதில் கட்டடங்களுக்கு மேல் வைக்கும் பேனர், கானாற்று (நீர் நிலை) நடுவில் வைக்கும் பேனர் நடுரோட்டை அடைத்து வைக்கப்படும் பேனர் என ஒவ்வொரு மெக சைஸ் பேனர்களும் மாதம் ரூ. லட்சத்துக்கும் குறையாமல் வசூலிக்கின்றனர். ஒன் டைம் இன்ஸ்வெஸ்ட் மென்ட் என்பதால் இந்த நிறுவனம் சில லட்சங்கள் மூலதனம் வைத்து விட்டு பல கோடி கொள்ளையடித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி நகரமைப்பு அதிகாரியிடம் கேட்டபோது, வேலூரில் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை தவிர வேறு எந்த விளம்பர நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அனுமதி பெற்ற அந்த "Ad" நிறுவனம் கூட விதிகளை மீறியே பேனர்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் அனைத்து பேனர் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறோம், விரைவில் மாநகராட்சி ஆணையர் அவற்றை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி அனைத்து விதிகள் மீறிய அனைத்து பேனர்கள் அகற்றப்படும் என தெரிவித்தார்.
இதேபோல வேலூர் ஆரிய பவன் சிக்னல் தொடங்கி பழைய பஸ்ஸ்டாண்டு வடக்கு காவல் நிலையம் வரை சாலை நடுவே சென்ட்டரிங் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுசிறு விளம்பர போர்டுகள் வைத்து லைட்டிங் வசதியும் செய்துள்ளனர். இதற்கு இதுவரை யாரிடமும் அனுமதியில்லை. அவர்களுக்கு எந்த அடிப்படையில் மின்சப்ளை கிடைக்கிறது என்பதும் மர்மமாக உள்ளது.
இதுகுறித்து வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் கேட்டபோது, நீங்கள் கூறிய புகார் என்னிடமும் வந்துள்ளது. எனவே நகரமைப்பு அதிகாரியிடம் விவரங்கள் கேட்டுள்ளேன். விதிகள் மீறியிருந்தால் நடவடிக்கை நிச்சயம் என்றார்.
வேலூர் லாங்குபஜார், சத்துவாச்சாரி மெயின் ரோடுகளில் சிறு.. சிறு கடைகள் நடத்தும் வியாபாரிகள் தங்கள் கடைகளின் முன்பு ஸ்டாண்டிங் போர்டு கூட வைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், வேலூர் மாநகராட்சியின் 4 மண்டங்களை சேர்ந்த அனைத்து பகுதிகளிலும் விளம்பர பேனர்கள் வைத்து பல கோடி வருமானம் பார்க்கின்றனர். இந்த வருமானம் அரசுக்கு வருவதாக இருந்தால் அதை வரவேற்கலாம். ஆனால் அரசு அதிகாரிகள் சிலருக்கும், விளம்பர நிறுவன அதிபர்களுக்குமே வருவாய் செல்கிறது.
இதில் கடந்த 25 ஆண்டுகளாக விளம்பர துறையில் கொடிகட்டி பறந்து வரும் குறிப்பிட்ட அந்த "Ad" நிறுவனம் ஆரணி சாலையில் பல கோடி மதிப்பில் விழா அரங்கம், விளம்பர நிறுவனம், ஆபீஸ் என மால் கணக்காய் கட்டியுள்ள கட்டடமே இதற்கு சாட்சி...
இந்த "Ad" நிறுவனம் வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி என அனைத்திலும் அதிகாரிகளை ஏமாற்றி ரூ.200 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான இரும்பு பேனர்களே ரூ.50 கோடி மதிப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு நிறுவனம் சில அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டு கொண்டு பல கோடி கொள்ளை அடிப்பதை நம்மால் வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது தகவல் அறியும் சட்டம் மூலம் கிடைக்கும் தகவல்களை சேகரித்து வைத்துள்ள சமூக ஆர்வலர்கள் பொது நல வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்தனர்.
1998ல் பொது இடங்களில் கட் அவுட்கள், விளம்பர பலகைகள் வைப்பதற்கான கட்டுப்பாடுகள் அடங்கிய விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கில், தமிழக அரசின் சட்டம் செல்லும் என்றும், பொது இடங்களில் கட் அவுட்கள், விளம்பர பலகைகள் வைக்க தடை விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
ஆனால், மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலட்சியத்தால், மீண்டும் பல இடங்களில் விளம்பர பலகைகள் முளைத்தன. போலீஸ், மாநகராட்சி போன்ற துறைகளின் அதிகாரிகளை ‘கவனித்து’ விட்டு, தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை, இந்த பலகைகளில் ஜொலிக்க விடுகின்றனர்.
இதற்கு தாறுமாறாக கட்டணம் வசூலிக்கின்றனர். அதிகாரிகள், நில உரிமையாளர், விளம்பர நிறுவனங்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்கு, அப்பாவி பொதுமக்களின் உயிர்பலி கொடுப்பது மட்டும் தொடர்கதையாக உள்ளது. தங்கள் பாக்கெட் நிரம்ப, மனித உயிர்களோடு அதிகாரிகள் விளையாடுகின்றனர் என்பது எள்ளளவும் ஐயமில்லை...
சாலையில் உள்ள மின் விளக்கு கம்பங்களையும் இந்த "Ad" நிறுவனம் விட்டுவைக்கவில்லை... அந்த வழியாகவே மாவட்ட ஆட்சியரும் நாள்தோறும் சென்று வருகிறார்... என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான்.. வேதனையாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இனியாவது மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கபோகிறார்களா? இல்லை.. வழக்கம் போல் வேடிக்கை பார்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...



No comments
Thank you for your comments