தமிழகத்தில் ஆண்டுதோறும் 42 லட்சம் பேருக்கு எச்ஐவி பரிசோதனை
சென்னை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பொதுமக்களுக்கும், 12 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கும் எய்ட்ஸ் பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தனியார் பங்கீட்டு முறையின் கீழ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இலவச ஏஆர்டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டியில், "இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக 1986 ம் ஆண்டு எய்ட்ஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் முதல் முறையாக 1994-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தொடங்கப்பட்டது.
2010-ம் ஆண்டு முதல் அன்றைய முதல்வர் கருணாநிதியின் தீவிர முயற்சியால் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு கடைக்கோடி மக்களுக்கு சென்றடைய செய்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை எய்ட்ஸ் நோயைக் கண்டறிய பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு படிப்படியாக எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே எய்ட்ஸ நோய் குறைந்த மாநிலமாக இன்று தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. கர்ப்பிணி பெண்களிடையே எய்ட்ஸ் நோய் தாக்கம் 2019-ம் ஆண்டு வெளிவந்த ஆய்வின்படி 0.24 சதவீதம் உள்ளது. இந்த நிலை தமிழகத்தில் 0.18 சதவீதமாக குறைந்துள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய அனைத்திலும் 2953 தொற்று கண்டறியும் நம்பிக்கை மையம் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 55 ஏ.ஆர்.டி கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது.
103 அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படுகிறது. தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக 34 இளைப்பாறுதல் மையம் ஆண்டு தோறும் ரூபாய் 2.41 கோடி செலவில் செயல்படுகிறது.
தமிழகத்தில் முதன்முறையாக 2009 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோயால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட சுமார் 3500 குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, உணவு மற்றும் கல்விக்காக ரூபாய் 25 கோடி நிதி பங்களிப்பு மூலம் வரும் வட்டித் தொகை செலவிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பொதுமக்களுக்கும், 12 லட்சம் கருவுற்ற தாய்மார்களுக்கும் எய்ட்ஸ் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட சுமார் 1.21 லட்சம் நபர்களுக்கு இலவச ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் முதன்முறையாக தனியார் பங்கீட்டு முறையின் கீழ் 8 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இதில் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இலவச ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 300 எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட நபர்கள் பயனடைவார்கள்.
மேலும், எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக ஏ.ஆர்.டி. கூட்டு மருத்துவ சிகிச்சை அவ்வப்போது ஏற்படும் உபாதைகள் (எய்ட்ஸ் நோய் கிருமி அளவு பரிசோதனை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு பரிசோதனை போன்ற சிகிச்சை மற்றும் பரிசோதனைகள் செய்யப்படும்" என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
No comments
Thank you for your comments