Breaking News

நியாயவிலைக் கடைகள், சேமிப்பு கிடங்குகளை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு

காஞ்சிபுரம்:

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடைகள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் நெல் கொள்முதல் நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகாவேரிப்பாக்கம் நியாயவிலை கடை, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சேமிப்பு கிடங்கு, கீழம்பி நியாய விலை கடை, தாமல் நெல் கொள்முதல் நிலையம், விஷார் நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை இன்று (02.05.2022) மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது : 

தமிழ்நாடு முழுவதும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள  4000 காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாலாஜாபாத் வட்டத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 10 நபர்களுக்கு மீண்டும் பணி அமர்த்தப்படுவார்கள். தரமான பொருட்களை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்படுவதை ஆய்வு செய்ய கூட்டுறவுத் துறை இணைப்பதிவாளர், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர், மாவட்ட வழங்கல் அலுவலர், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் அலுவலர் ஆகியோரை கொண்ட ஆய்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இக்குழுவினர் ஆய்வு செய்த பின்னர் நியாய விலைக் கடைகளுக்கு பொருட்கள் அனுப்பப்படும்.. மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் தலைமையில் நுகர்பொருள் வாணிப கழகத்தில் அனுப்பப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள். தரமான அரிசியினை நியாய விலை கடைகளுக்கு அனுப்பிடும் பணியினை மாவட்ட வழங்கல் அலுவலர் முழு பொறுப்பாக இருந்து செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

286 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளை ரூ.96 கோடி செலவில் புனரமைப்பு செய்யப்படும். சிறுகாவேரிப்பாக்கத்தில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கினை ரூ.2.5 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நியாய விலைக் கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கடை திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். 

800 முதல் 3000 வரை குடும்ப அட்டை கடைகளை கொண்ட நியாய விலை கடைகளை பிரித்து புதிய கடைகள் உருவாக்கப்படும். 6976 வாடகை கட்டடங்களில் இயங்கும் நியாயவிலைக் கடைகளை சொந்த கட்டடங்களுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 11 மாதங்களில் 11 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சன்ன ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,960 ரூபாயிலிருந்து 2060 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு 75 ரூபாயாக உயர்த்தப்பட்டு 1,945 ரூபாயிலிருந்து 2,020 ரூபாயாக கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 

நெல் கொள்முதல் செய்யப்படும் கூலித் தொழிலாளர்களுக்கு மூட்டைக்கு ரூபாய் 3.25 ரூபாயிலிருந்து  10 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் 500 மெட்ரிக் டன் நவீன அரிசி ஆலை அமைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 169 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் பெறப்பட்ட நெல் மூட்டைகள் உடனடியாக அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் உணவுத்துறை வழங்கல் மற்றும் நுகர்வோர் ஆணையாளர் திரு.க.ராஜாராமன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம். நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.பிரபாகர், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் திருமதி.லட்சுமி, நுகர்பொருள் வாணிப கழக மண்டல இயக்குநர் திருமதி.சத்தியவதி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்,

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments