Breaking News

போலீசார் சங்கம் தொடங்க அனுமதி கிடைக்குமா..? காத்திருப்பில் போலீசார்....

கோவை தமிழக போலீசாருக்கு சங்கம் அமைக்க அரசு அங்கீகாரம் வழங்குமா? என்ற எதிர்பார்ப்பில் போலீசார் காத்திருக்கின்றனர்.

போலீசாரின் குறை தீர்க்கும் நாள் போன்ற பல்வேறு மாற்று வழிகளை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. ஆனால் இந்த நடைமுறைகளால், தங்கள் குறைகளுக்கு அதிகாரிகளால் தீர்வு காண முடிவதில்லை என்பது, போலீசாரின் பொதுவான கருத்தாகவே உள்ளது.



போலீசாரின் பொதுவான கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்க, அமைப்பு ரீதியான சங்கம் அவசியம் என, போலீசார் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் தர்மவீரா கமிஷன் பரிந்துரையை ஏற்று, தமிழக அரசும், ஆணை 1431/79 படியும் மீண்டும் ஆணையில் சிறிது மாற்றம் செய்து, அரசாணை 82/81 வாயிலாக சங்கம் அமைக்க தேவையையும், போலீசார் தங்கள் பொதுவான குறைகளை எடுத்துரைக்க வசதியாக ஆணைகளில் ஒப்புதல் அளித்து சட்டபூர்வ நிபந்தனைக்குட்பட்டு இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர் வரை சங்கம் துவங்க பெறலாம் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது.

இதை எடுத்துகாட்டும் போலீசார், தங்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.போலீசார் தரப்பில் கூறியதாவது:பல மாநிலங்களில், போலீசார் சங்கத்துக்கான அங்கீகாரம் சட்ட முறைப்படி வழங்கப்பட்டு பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது. 

கேரளா, ஆந்திரா,  தெலுங்கானா உட்பட பல மாநிலங்களில் போலீஸ் சங்கங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்திலும் போலீசாருக்கு சங்க அங்கீகாரம் வழங்கினால், போலீஸ்துறையின் கட்டுப்பாடு இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பொதுமக்களிடம் நல்லுறவு ஏற்பட வாய்ப்புள்ளது.

காவல்துறைக்கு  அல்லது அரசுக்கு, பொதுமக்களுக்கு இதனால் குறைபாடுகள் ஏற்படும் என அரசு நினைத்தால், குறைபாடுகள் இல்லாமல் சங்கம் செயல்பட பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கலந்து பேசி தீர்வு காணலாம். 

சங்கம் அமைத்தால், எவ்வித கோரிக்கையும் நிறைவேற்ற வலியுறுத்தி, எக்காலத்திலும் வேலை நிறுத்தம், போராட்டம் போன்ற செயல்கள் நடத்தப்படாது. இதனால், அரசு பரிசீலனை செய்து போலீசாரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். சட்டசபை கூட்டத்தில் போலீஸ் மானிய கோரிக்கையில், இதற்கான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments