Breaking News

பண்ணைக்குட்டைகளுக்கு வாய்ப்பு ! -எவ்வாறு அமைப்பது... மாவட்ட ஆட்சியர் தகவல்

மழைநீர் சேமிப்பிற்கும், வழிந்தோடும் மழை நீரினால் மண் அரிமானத்தை தடுக்கவும், மண் வள பாதுகாப்பிற்கும், மிக சிறந்த மற்றும் நிரந்தரமான தீர்வு வயல்தோறும் பண்ணைக்குட்டை அமைப்பது ஆகும்.  அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண்வள பாதிப்பும் தவிர்க்க முடியாத ஒன்றாகிறது.

பண்ணைக்குட்டை எவ்வாறு அமைப்பது 

ஒரு ஏக்கர் நிலத்தில் 1 சென்ட் பரப்பளவில் (8 மீ x 5 மீ (அ) 10 மீ x 4மீ) 1.5 மீட்டர் ஆழத்திற்கு வெட்ட வேண்டும்.  குறைந்தது ஒரு ஏக்கரில் ஒரு சென்ட் பரப்பளவு அதாவது 1 சதவிகிதத்திலிருந்து அதிகபட்சமாக 10 சதவிகித பரப்பளவில் 10 சென்டில் பண்ணைக்குட்டை அமைத்து பயன்பெறலாம்.  

சமமான நிலங்களில் வரப்பு ஓரங்களிலோ அல்லது வயலின் நடுவிலோ வெட்டலாம்.  லேசான சரிவு உள்ளன நிலங்களில் தாழ்வானபகுதியை அறிந்து வெட்ட வேண்டும், வெட்டி எடுக்கும் மண்ணில் பெரும் பகுதியை வயல் வரப்பினை பலப்படுத்தவும், சுற்றி அணை கட்டவும், மீதியை தேவைப்படும் இடங்களில் வயலை சமப்படுத்தவும் பயன்படுத்தலாம்.  

ஒரு சென்ட் பரப்பளவில் அமைக்கப்படும் பண்ணைக் குட்டையின் கொள்ளளவு 60 கன மீட்டர் அதாவது 60,000 லிடடர் ஆகும்.

இதனை குறைந்த செலவில் அமைக்க நவீன இயந்திரங்களை (ஜே.சி.பி. அல்லது பொக்லைன்) பயன்படுத்தலாம்.  அதனை அமைக்க  ரூ.5000/- வரை செலவாகும்.

பண்ணைக் குட்டையின் பயன்கள்

வயலில் வழிந்தோடி கடலில் கலக்கும்நீரை திறம்பட சேமிக்கலாம்.

மண் அரிமானம் தடுக்கப்படும்.

மண்வளம் பாதுகாக்கப்படும்.

நிலத்தடி நீர் உயரும், குடிநீரின் தரம் மேம்படும்.

நிலத்தடி நீரில் உப்பு நீங்கி நல்ல நீராகும்

வெள்ளசேதம் தவிர்க்கப்படும்.

மழை குறைவான காலங்களில் வறட்சியினை சமாளிக்கும்.

நிலத்தடி நீர்மட்டம் உயருவதால் செடிகள், மரங்கள் உருவாகி தழைத்து பசுமைப் போர்வை உருவாகும்.

கடல் நீர் நிலத்தடி நீரில் ஊடுருவல் குறையும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு உருவாகும்.

பூமி சூடாகுதல் தானே தணிக்கப்படும்.

பண்ணைக் குட்டையின் அளவினை 10 சென்டுக்கு மேல் 50 சென்ட் பரப்பளவில் அமைத்து மீன் குட்டை அமைத்து மீன் வளர்ப்பு செய்யலாம்.  இது ஒருங்கிணைந்த  பண்ணைய முறைக்கு வழிவகுக்கும்.  விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.  உணவு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீடித்த நிலையான வேளாண்மை மற்றும் நிலையான வருமானத்திற்கும் உறுதி அளிக்கும்.

கரும்பு, வாழை மற்றும் பழ மரத் தோட்டங்களின் பண்ணைக் குட்டை

பண்ணைக்குட்டையினை, கரும்பு, வாழை, முந்திரி, தென்னை, பலா தோப்புகளிலும், மணிலா, சூரியகாந்தி, கம்பு, மக்காச்சோளம், பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை சாகுபடி செய்யும் நிலத்திலும் வெட்டலாம்.

பண்ணைக்குட்டை அமைப்பதால் நிலத்தில் விழும் ஒவ்வொரு துளியும் வழிந்தோடி வீணாகாமல் இருக்க உதவுகிறது.  பண்ணைக் குட்டை உள்ள ஒவ்வொரு வயலும் சிறிய நீர்தேக்கமாக செயல்படுகிறது.  இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.  நிலத்தின் மேற்பரப்பிலும், நிலத்தடியிலும், உறிஞ்சப்படும் நீரினால் மரங்கள், செடிகொடிகள் எளிதாக வளரும்.  பசுமைப் போர்வையால் பூமி குளிர்ந்து வாயு குளிர்ந்து மேகங்கள் மழை கொடுக்கும்.

இதற்கு மேலாக குழியின் நடுவில் அல்லது விளிம்பு பகுதி சுற்றிலும் ஒன்றுக்கு மேலான பகுதிக்கேற்ப இலந்தை, நெல்லி, மா, பலா, எலுமிச்சை, பாதாம், முந்திரி, சப்போட்டா, நாவல், கொய்யா, சாத்துக்குடி போன்ற கனிதரும் மரங்களை நடலாம்.  

வேம்பு, தேக்கு, பூவரசு, குமிழ், செஞ்சந்தனம், மூங்கில் போன்றவை வீடுகட்டவும், பணம் கொழிக்க உதவும் மரங்களை நடலாம்.  

கருவேல், சவுண்டல், வாகை, வாதநாராயணன், கொடுக்காப்புளி போன்ற விறகு மற்றும் கால்நடைகளுக்கு தீவனம் தரும் மரக்கன்றுகளை தேர்வு செய்து நட்டு பயன் அடையலாம்.  மரங்களுக்கு அருகில் கொடி வகை காய்கறிகளை வளர்க்கலாம்.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பலவகையான மண் உள்ளது.  அனைத்து பகுதியிலும் விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைக்க திட்டங்கள் உள்ளன.  

உங்கள் பகுதி வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மேலும் விவரம் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments