Breaking News

கோடை வெயில் எதிரொலி: அமிர்தி பூங்காவில் வன விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு

வேலூர், ஏப்.12-

கோடை வெயிலை சமாளிக்க அமிர்தி பூங்காவில் வன விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமிர்தி வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் முதலியன உள்ளன.

கோடை வெப்பநிலை அதிகரிப்பால் அனைத்து விலங்குகளுக்கும் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வெப்ப நாட்களில் விலங்குகளை பராமரிப் பதற்கு முன்னதாகவே திட்டமிடப் பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றுக்கான தனித்துவமான மற்றும் புதுமையான கோடைகால மேலாண்மைத் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றனர். 

அனைத்து விலங்கு களுக்கும் போதுமான நிழல் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பறவைகளின் கூட்டுகளுக்கு மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு, பகலின் வெப்பமான நேரங்களில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மாமிச உண்ணிகளுக்கு உறைந்த இறைச்சியும், குரங்குகள் மற்றும் பறவைகளுக்கு பழங்களும் வழங்கப் படுகின்றது.

விலங்குகள் பறவைகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகின்றனர். பூங்கா பகுதி முழுவதும் வெயிலின் தாக்கம் ஏற்படாமல் தண்ணீர் அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர்.

அமிர்தி வனப்பகுதியில் கோடைகாலங்களில் விலங்குகள் தாகம் தீர்க்க அங்குள்ள குட்டையில் வனத்துறையினர் தண்ணீரை தேக்கி வைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு அமிர்தி வனப்பகுதியில் உள்ள ஆற்றில் ஊற்றுத் தண்ணீர் ஏராளமான இடங்களில் பெருகிக் கிடக்கின்றன.இதனால் வனப்பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விடுமுறை நாளையொட்டி அமிர்திப் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இனி வரும் கோடை காலங்களில் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

No comments

Thank you for your comments